×

புத்துணர்வு முகாம் முடிந்து மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி புதுச்சேரி திரும்பியது அதிகாரிகள் உற்சாக வரவேற்பு பு

துச்சேரி,   மார்ச் 29: மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாம் முடிந்து புதுச்சேரி   மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி புதுச்சேரி திரும்பியது. அதற்கு   அதிகாரிகள் சிறப்பு வழிபாடு செய்து உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவை   மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த மாதம் 8ம்தேதி தமிழகம், புதுச்சேரி   கோயில்கள் மற்றும் மடங்களைச் சேர்ந்த யானைகளுக்கான புத்துணர்வு முகாம் துவங்கி நடைபெற்றன. இதில் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி   உள்பட 25 யானைகள் முழுமையாக பங்கேற்றன. ரூ.1.62 கோடி செலவில் நடைபெற்ற   இம்முகாம் மொத்தம் 48 நாட்கள் நடைபெற்றன. நேற்று முன்தினம் இந்த முகாம்   நிறைவடைந்த நிலையில் அனைத்து யானைகளும் அங்கிருந்து லாரிகளில்  ஏற்றப்பட்டு  அதன் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது  யானைகள்  ஒன்றோடு ஒன்று தழுவிக் கொண்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து  அங்கிருந்தவர்களை  நெகிழ்ச்சியடைய செய்தது.

நேற்று காலை 7 மணியளவில்  புதுச்சேரி தலைமை  செயலகம் எதிரே கடற்கரை ஒட்டிய பகுதியை யானை லட்சுமி  வந்தடைந்தது. லாரியில்  இருந்து கீழே இறக்கப்பட்ட லட்சுமிக்கு இந்து சமய  அறநிலையத்துறை அதிகாரிகள்,  கோயில் நிர்வாகிகள் மாலை அணிவித்து, பழம்  கொடுத்து வரவேற்றனர். பின்னர்  தீபாராதனை காட்டி சிறப்பு வழிபாடு செய்தனர்.  பின்னர் யானை லட்சுமியை  அங்கிருந்து அருகிலுள்ள மணக்குள விநாயகர்  கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.  அங்கும் யானை லட்சுமிக்கு சிறப்பு வழிபாடு  செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து  பக்தர்கள் லட்சுமியிடம் ஆசிபெற்றுச்  சென்றனர்.  வனத்துறை துணை வனக்காப்பாளர்  வஞ்சுளவள்ளி, கோயில் நிர்வாக அதிகாரி  கருணாகரன், மருத்துவர் சம்பத்குமார்  மற்றும் அறங்காவல் குழுவினர்,  அர்ச்சகர்கள், பக்தர்கள் உடனிருந்தனர்.  மேட்டுப்பாளையம் முகாமிற்கு சென்று  திரும்பிய மணக்குள விநாயகர் கோயில்  யானை லட்சுமியின் காலில் இருந்த  காயங்கள் ஆறி நல்ல முன்னேற்றம் அடைந்து  புத்துணர்ச்சியுடன்  திரும்பியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Lakshmi Puducherry ,Manakkula Ganesha temple ,
× RELATED புத்துணர்வு முகாம் முடிந்து மணக்குள...