×

சேலம் மணியனூரில் தற்காலிக கொரோனா பாதுகாப்பு மையம்

சேலம், மார்ச் 29:கொரோனா தொற்று தற்போது சற்று அதிகரித்து வரும் நிலையில் சேலம் மாநகராட்சிப் பகுதியில் முன்னேற்பாடு நடவடிக்கையாக மணியனூரில் உள்ள சேலம் சட்டக்கல்லூரி வளாகத்தில் கொரோனா மையம் நேற்று செயல்பட தொடங்கி உள்ளது. இதையடுத்து, தற்காலிக கொரோனா பாதுகாப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது : சேலம் மாநகராட்சி பகுதிகளில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் திருமண மண்டபங்கள், உணவகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் முகக்கவசம் அணிவதும் சமூக இடைவெளி கடைபிடிப்பதும், கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வும், மீறுபவர்களை கண்டறிந்து அபாராதம் விதிக்கவும் சேலம் மாநகராட்சியில் சுகாதார அலுவலர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொரோனா பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் 110 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறி உள்ளவர்கள், குறைந்த அளவு பாதிப்பு உள்ளவர்களுக்கு இம்மையத்தில் சிகிச்சை வழங்கப்படும். கூடுதல் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் போது, மாநகர நல அலுவலர் பார்த்திபன், மருத்துவ அலுவலர் ரேவதி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Salem Maniyanur ,
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா