கள்ளத்தொடர்பால் குடும்பத்தகராறு வாலிபரை கத்தியால் குத்திய பெயிண்டர் சிறையிலடைப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 29: கிருஷ்ணகிரி அருகே கள்ளத்தொடர்பு பிரச்னையில் வாலிபரை சரமாரி குத்திய பெயிண்டரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். கிருஷ்ணகிரி அருகே கே.பூசாரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் சந்தோஷ்குமார்(23). இவருடைய நண்பர் அதே ஊரைச் சேர்ந்த சிவராஜ்(20). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டரான சத்யராஜ்(29) என்பவரது மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுதொடர்பாக சத்யராஜ் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், சந்தோஷ்குமார் கடந்த 26ம் தேதி நள்ளிரவு, அதே ஊரில் உள்ள பால் சொசைட்டி கட்டிடம் அருகே சென்றபோது, குடிபோதையில் வந்த சத்யராஜ், உன் நண்பனால் தான் என்னை விட்டு மனைவி பிரிந்து விட்டாள் எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சத்யராஜ், தான் வைத்திருந்த கத்தியால் சரமாரி குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சந்தோஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மகாராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிந்து, சத்யராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தார்.

Related Stories: