தேர்தல் ஆணையம் தரப்பில் பொருட்களுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்வதாக புகார்

சிவகங்கை, மார்ச் 29:  சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் செலவு கணக்கீட்டிற்கு விலை நிர்ணயம் செய்வதில் பொருட்களுக்கு கூடுதலாக மதிப்பிடுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஏப்.6ல் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்.26ல் வெளியானது. தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து செய்யப்படும் செலவுகள் சம்பந்தப்பட்ட கட்சிகளின் செலவு கணக்கில் சேரும். வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியவுடன் தொகுதிகளில் நடக்கும் செலவுகள் வேட்பாளர்களின் கணக்கில் சேர்கிறது. இந்த அடிப்படையில் வாகன பிரச்சாரம், பொதுக்கூட்டம், சாப்பாடு என ஒவ்வொன்றிற்கும் ஆகும் செலவுகளில் அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அல்லது வாடகை பொருட்கள் என அனைத்திற்கும் தேர்தல் ஆணையம் ஒரு விலை நிர்ணயம் செய்துள்ளது. செலவு கணக்கீட்டு குழுவினர் ஒவ்வொரு இடத்திலும் நடந்த பிரச்சாரத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களுக்கு ஆணையம் நிர்ணயம் செய்த விலையை கணக்கீடு செய்து வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும். இவ்வாறு விலை நிர்ணயம் செய்ததில் ஒவ்வொரு பொருட்களுக்கும் அதிகப்படியான விலை நிர்ணயம் செய்துள்ளதாக வேட்பாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பொதுக்கூட்ட மேடைகளில் பயன்படுத்தப்படும் துணிகள், ஒரு ட்யூப் லைட் செட் வாடகை, சாப்பாடு, டீ செலவு என அனைத்து பொருட்களையும் கூடுதலாக விலை நிர்ணயம் செய்துள்ளதாகவும், இதை குறைத்து உண்மையான விலையை கணக்கில் சேர்க்க வேண்டும் எனவுமள் வலியுறுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர் ஒருவர் கூறுகையில், சாதாரண காடா துணி குறைந்த விலையிலேயே வாங்குகிறோம். அதை மீட்டர் ரூ.300க்கு மேல் செலவு கணக்கில் எழுதுகின்றனர். இதுபோல் ட்யூப் லைட் செட் மிகக்குறைந்த விலையிலேயே எடுக்கிறோம். ஆனால் இரட்டிப்பு மடங்காக கணக்கில் சேர்க்கின்றனர். இதுபோல் அனைத்து பொருட்களின் செலவையும் கூடுதலாக நிர்ணயம் செய்துள்ளனர். சென்னை, மதுரை போன்ற நகர்ப்புறங்களில் உள்ள விலை வேறு. இங்குள்ள விலை வேறு. எனவே கூடுதலாக கணக்கில் எழுதுவதை தவிர்த்து இப்பகுதியில் என்ன விலையோ அதையே நிர்ணயம் செய்து செலவு கணக்கில் சேர்க்க வேண்டும் என்றார். 

Related Stories:

>