திமுக ஆட்சி அமைந்தவுடன் தொகுதியில் அனைத்து கிராமத்திற்கும் திருமண மண்டபம் கட்டி தரப்படும் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ உறுதி

திருப்புத்தூர், மார்ச் 29: திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து கிராமங்களுக்கும் திருமண மண்டபங்கள் கட்டித்தரப்படும் என, திருப்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ உறுதியளித்தார். திருப்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ சிங்கம்புணரி தெற்கு ஒன்றியப் பகுதிகளில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘திமுக ஆட்சி அமைந்தவுடன் சிறப்புத்திட்டம் தீட்டி அனைத்து கிராமங்களுக்கும் திருமண மண்டபங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்.எஸ்.கோட்டை சூரியாநகர் பகுதியில் மின்குறைபாடுகளை போக்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தர நடவடிக்கை எடுப்பேன்.

கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தி தராத திட்டங்களை, திமுக ஆட்சி அமைந்தவுடன் இரண்டு மடங்காக பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன். அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு பொருளின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் ஒவ்வொரு குடும்பமும் பொருளாதாரத்தில் சிக்கி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கொரோனா காலத்தில் கூட மக்களுக்கு உதவ வேண்டும் என்பதைவிட, தாங்கள் கொள்ளையடிக்க வேண்டும், பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையுடன் தான் ஆளுங்கட்சியினர் அலைந்தார்கள். ஆனால் கொரோனா காலத்தில், நான் தொகுதி முழுவதும் 98 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியது எனக்கு மனநிறைவை தருகிறது. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், திமுக தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள 505 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்’’ என்றார். 

Related Stories:

>