ஒரு வருடத்திற்கு பிறகு கமுதி-கடலாடி பஸ் இயக்கம் கிராமமக்கள் மகிழ்ச்சி

சாயல்குடி, மார்ச் 29: கமுதியிலிருந்து கடலாடி வரும் அரசு பஸ் ஒரு வருடமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தினகரன் செய்தி எதிரொலியால் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது. கடலாடியிலிருந்து கோவிலாங்குளம் வழியாக கமுதி செல்ல அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டது, காலை, மாலை என இரு வேளை மட்டும் வந்து செல்லும் இந்த பஸ்ஸை கடலாடி கோவிலங்குளம் வழித்தடத்தில் உள்ள மங்களம், ஆப்பனூர் தெற்கு கொட்டகை, கொம்பூதி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் கோவிலாங்குளம் கமுதி வழித்தடத்தில் உள்ள தோப்படைபட்டி, செங்கற்படை, புதுக்கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் என 20க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக பஸ் நிறுத்தப்பட்டது. 4 மாதங்களில் மற்ற பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டும், இந்த சாலை சரியில்லாத காரணத்தை காட்டி ஒரு வருடமாக இந்த பஸ் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தினகரன் செய்தி எதிரொலியாக சேதமடைந்த சாலையை அகற்றிவிட்டு புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இருந்தும் பஸ் இயக்கப்படவில்லை. இது குறித்து தினகரனில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து கமுதியிலிருந்து கோவிலங்குளம் வழித்தடத்தில் கடலாடிக்கு நேற்று முதல் பஸ் மீண்டும் இயக்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து பஸ் இயக்கப்பட்டதால் இப்பகுதி கிராமமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: