×

குருத்தோலை ஞாயிறு கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

காஞ்சிபுரம், மார்ச் 29: காஞ்சிபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் பேராயர் தேவஇரக்கம் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறுவர்ள் என அனைவரும் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். குருத்தோலை ஞாயிறு தொடங்கி ஒரு வார காலம் புனித வாரமாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கின்றனர். இந்த ஒரு வாரத்தில் இயேசுவின் மரணம், அதற்கு முன்னதாக அவர் பட்ட வேதனைகளை நினைவுகூறும் வாரமாக உள்ளது. இயேசுவின் மரணத்தை நினைவு கூறும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளியும் இயேசுவின் உயிர்ப்பை நினைவு கூறும் வகையில் ஏப்ரல் 4ம் தேதி ஈஸ்டர் பண்டிகையையும் கொண்டாட உள்ளனர்.

இந்நிலையில், இந்த தினத்தில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக செல்வது வழக்கம். அதன்படி நேற்று காஞ்சிபுரத்தில் கிறிஸ்தவர்கள் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் இருந்து குருத்தோலைகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு  பிஎஸ்கே தெரு, நடுத்தெரு, காமராஜர் சாலை, நெல்லுக்காரத் தெரு, ஆஸ்பிடல் ரோடு வழியாக மறுபடியும் தேவாலயத்தை வந்தடைந்தனர். இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளை கைகளில் பிடித்தபடி கிறிஸ்தவ பாடல்களை பாடிக் கொண்டு  சென்றனர். இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அச்சிறுப்பாக்கம் மழைமலைமாதா திருத்தலம், காஞ்சிபுரம் தூய இருதய அன்னை ஆலயம், சிஎஸ்ஐ தூய ஆந்திரேயர் திருத்தலம், உத்திரமேரூர் மல்லிகாபுரம் திருத்தலம் உள்பட பல தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நடந்தது.

Tags : Crucifixion Sunday ,Christians ,
× RELATED ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள்