×

பங்குனி உத்திர பெருவிழா ஏகாம்பரநாதர் கோயிலில் திருக்கல்யாண விழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம், மார்ச் 29: காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் ஆலயத்தில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கடந்த 18ம் தேதி பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை மற்றும் மாலை வேளைகளில் உற்சவர் ஏகாம்பரநாதர் சிம்மம்,  சூரிய பிரபை, சந்திர பிரபை, அன்னம், பூதம், நாகம், வெள்ளி இடபம்,  வெள்ளி அதிகார நந்தி, கையிலாய பீட இராவணன், அம்பிகை காமதேனு ஆகிய வாகனத்தில் எழுந்தருளினார்.

விழாவின் 6ம் நாளில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் திருக்கூட்டத்துடன் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளும் மாபெரும் திருக்காட்சி நடந்தது. இதையடுத்து, வெள்ளித்தேர் உற்சவம், மரத்தேரோட்டம் ஆகியவை நடந்தன. மேலும்  குதிரை வாகனம், மாவடி சேவை, சபாநாதர் தரிசனம், நூதன ருத்திரகோடி விமானம் உள்பட பல்வே உற்சவங்களை தொடர்ந்து நேற்று அதிகாலை பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் அதிர்வேட்டுகள், மேளதாளங்கள் முழங்க ஏகாம்பரநாதருக்கும் ஏலவார்குழலிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. அதே நேரத்தில் கோயில் மண்டபத்தின் எதிரே 50க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கும் திருமணம் நடத்தப்பட்டது. பிறகு சுவாமியும், அம்பாளும் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில், காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த தாமல், பாலுசெட்டிசத்திரம், முசரவாக்கம், களக்காட்டூர், குருவிமலை, அப்துல்லாபுரம், ராஜகுளம், பரந்தூர் உள்பட பல பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Ekambaranathar Temple ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.20.25 லட்சம் வசூல்