தேர்தல் பணி ஒதுக்கீட்டில் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மனு

திருச்சி, மார்ச் 26: திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் தேர்தல் பணி விலக்கு தொடர்பாக நியாயமான காரணங்களுடன் இருமுறை மனு அளித்தோம். ஆனால் கோரிக்கைக்கு மாறாக கடின நோயால் பாதித்தவர், கர்ப்பிணிகள், கொரோனாவால் பாதித்தவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்களையும் பயிற்சி வகுப்பில் பங்கேற்காததால் நோட்டீஸ் கொடுத்து அலைக்கழித்திருப்பது ஆசிரியர்களிடையே மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

நேரில் விளக்கம் அளித்த ஆசிரியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரச்சொல்லி இருக்கின்றனர். இந்த நடைமுறைகள் ஆசிரியர்களை வேண்டுமென்றே மிரட்டும் வகையில் இருப்பதாக உணர்கின்றனர்.

ஆசிரியர்கள் யாரும் திட்டமிட்டு தேர்தல் வகுப்பை புறக்கணிக்கவில்லை. தேர்தல் பணி வழங்கும் முன்பே மருத்துவ விடுப்பு எடுத்தவர்கள், தீவிர நோயால் பாதித்தவர்கள், கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை செய்தவர்களையும் தேர்தல் பணி பட்டியலில் சேர்த்தது தான் குளறுபடிக்கு காரணம். கல்வித்துறைக்கும் தேர்தல் அலுவலர்களக பணியாற்றும் வருவாய்த்துறைக்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் ஆசிரியர்களே பாதிக்கப்படுகின்றனர். உண்மை காரணங்களுக்காக தேர்தல் பயிற்சியில் பங்கேற்காதவர்களுக்கு 17-ஏ வழங்குவதை தவிர்த்து எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. ஆசிரியர்கள் பதவிக்கேற்ப வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் பெண் ஆசிரியர்களை அழைத்து செல்ல தனி வாகனம் வசதி செய்துதர வேண்டும். 20 கி.மீ., தொலைவில் பெண்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>