மஞ்சூர்-குன்னூர் இடையே அரசு பஸ் இயக்க வலியுறுத்தல்

மஞ்சூர், மார்ச் 26:  மஞ்சூர்- குன்னூர் இடையே கால அட்டவணைப்படி அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலானோர் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு ஊட்டி மற்றும் குன்னூர் சென்று வருகின்றனர். 90 சதவீதம் மக்களும் தங்கள் போக்குவரத்திற்கு அரசு பஸ்களையே நம்பியுள்ளனர்.

மேலும், மஞ்சூர் பகுதியில் உள்ள அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் வெளியூர் தொழிலாளர்களும் அரசு பஸ்களிலேயே பயணித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக மஞ்சூரில் இருந்து குன்னூர் பகுதிக்கு செல்லும் அரசு பஸ்கள் கால அட்டவணைப்படி குறித்த நேரத்திற்கு இயக்காமல்  முன்னதாகவே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, பகலில் மேட்டுபாளையத்தில் இருந்து குன்னூர், மஞ்சூர் வழியாக முள்ளிகூர் பகுதிக்கு செல்லும் அரசு பஸ், மாலை 6 மணிக்கு மஞ்சூரில் இருந்து புறப்பட்டு மீண்டும் குன்னூர் வழியாக இரவு மேட்டுப்பாளையம் செல்லும். பணி முடிந்து வெளியூர் செல்பவர்கள் மற்றும் கோவை பஸ் தவற விடுபவர்களுக்கு வசதியாக இந்த பஸ் இயக்கப்பட்டு வந்தது. மேலும், மஞ்சூரில் இருந்து மாலை நேரத்தில் குன்னூர் செல்லும் பயணிகளுக்கு வசதியாகவும் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த அரசு பஸ் கடந்த சில நாட்களாக மாலை 6 மணிக்கு பதில் 15 நிமிடம் முன்னதாக 5.45க்கே மஞ்சூரில் எடுக்கப்படுகிறது. இதனால், 6 மணிக்கு பஸ் புறப்படும் என எதிர்பார்த்து வரும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். இதை தவறவிட்டால் அடுத்த பஸ் இரவு 8 மணிக்கு என்பதால் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் கடும் அதிருப்தி அடைகின்றனர். இதனால், கால அட்டவணைப்படி அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>