×

ஊட்டி தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு

ஊட்டி, மார்ச் 26: ஊட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார்.தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், ஊட்டி தொகுதியில் 308 வாக்குச்சாவடி மையங்களும், குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) ஆகிய இரு தொகுதிகளில் தலா 280 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், 112 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து கடந்த 22ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 3 தொகுதிகளிலும் ெமாத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, ஊட்டி தொகுதி பொது பார்வையாளராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பனுதர் பெஹராவும், கூடலூருக்கு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ராகுல் திவாரியும், குன்னூர் தொகுதிக்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சவ்ரவ் பஹாரியும் பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, ஊட்டி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் பனுதர் பெஹரா, நேற்று ஊட்டி தொகுதிக்குட்பட்ட குந்தா வட்டத்தில் உள்ள முள்ளிமலை உயர்நிலை பள்ளி வாக்குச்சாவடி மையம், ஊட்டி அருகே தலைக்குந்தா ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வாக்குச்சாவடி மையம், சாண்டிநல்லா தபால் நிலைய வாக்குச்சாவடி மையம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அங்கு அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Tags : Ooty ,
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்