×

முத்துப்பேட்டை கருமாரியம்மன் கோயில் பகுதியில் பயன்பாடின்றி கிடக்கும் நிழற்குடை: ஸ்டாப்பில் நின்று செல்லாத பஸ்கள்

முத்துப்பேட்டை, மார்ச் 26: முத்துப்பேட்டை கருமாரியம்மன் கோயில் பஸ் நிறுத்ததில் திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் போன்ற வழித்தடங்களில் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம். இந்த பஸ் நிறுத்தத்தால் மருதங்காவளி தெரு, கருமாரியம்மன் கோயில் தெரு, கால்நடை மருத்துவமனை தெரு பகுதி மக்கள் பயனடைந்து வந்தனர்.
மேலும் அருகே உள்ள கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கும் வசதியாக இருந்து வந்தது.
இந்நிலையில் திறந்த வெளி பஸ் நிறுத்தமாக இருந்ததால் பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்ததால் இப்பகுதியில் மினி பஸ் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் அப்போதைக்கு நாகை எம்.பி.யாக இருந்த ஏ.கே.எஸ்.விஐயன் தனது 2011-12 நாடாளுமன்ற மேம்பாடு நிதியில் அப்பகுதியில் பயணியர் நிழற்குடை அமைத்து கொடுத்தார். அன்று முதல் இன்று வரை இந்த பஸ் நிறுத்ததில் பஸ்கள் நிற்பதோ, பயணிகளை ஏற்றிச்செல்வதோ இல்லை. பலமுறை இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்த கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
இதனால் இப்பகுதி மக்கள் திருத்துறைப்பூண்டியிலிருந்து வரும்போது ஆலங்காடு அண்ணா சாலை நிறுத்ததிலும், பட்டுக்கோட்டை பகுதியிலிருந்து வருபவர்கள் புதிய பஸ் நிலையத்திலும் இறங்கி நடந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பஸ் நிறுத்த பயணியர் நிழற்குடை கட்டி 10 ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வராததால் கட்டிடம் அசுத்தமாகி வீணாகி வருகிறது.
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், பகுதி மக்களின் அவசியத்தை உணர்ந்து அப்போதைய திமுக எம்.பி இந்த பயணியர் நிழற்குடையை கட்டிக்கொடுத்தார். அரசு பழிவாங்கும் நோக்கத்துடன் பஸ்களை தற்போது நிறுத்துவது கிடையாது.
இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை. இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவிட்டால் போரட்டம் நடத்துவோம் என்றனர்.

Tags : Muthupet Karumariamman temple ,
× RELATED முத்துப்பேட்டை கருமாரியம்மன் கோயில்...