×

நீடாமங்கலம் ரிஷியூரில் பாரம்பரிய பூங்கார் நெல் நடவு திருவிழா

நீடாமங்கலம், மார்ச் 26: நீடாமங்கலம் வேளாண் கோட்டம் ரிஷியூரில் பூங்கார் பாரம்பரிய நெல் ரகம் நடவு திருவிழா நேற்று எளிமையாக நடைபெற்றது.
நீடாமங்கலம் ஒன்றியம் ரிஷியூரில் இயற்கை வேளாண் ஒருங்கிணைந்த பண்ணை, ரிஷியூர் மற்றும் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் இணைந்து ஆண்டுதோறும் பாரம்பரிய நெல் நடவு திருவிழா நடத்தி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு ரிஷியூரில் எளிமையாக நடந்தது. பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கையில் ஏற்படும் மாறுபாடுகளுக்கும், சவால்களுக்கும் ஏற்றவாறு தன்னை தற்காத்துக்கொள்ளும் வல்லமை படைத்தவை. அத்தகைய பாரம்பரிய அரிசியை உண்ணும்போது நமக்கு பொதுவாக நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிப்பதோடு பல நன்மைகளை தரக்கூடியது. ரிஷியூரில் 5 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் ரகமான பூங்கார் நடவு செய்யப்பட்டது.
நடவு செய்யப்பட்ட பூங்கார் பாரம்பரிய நெல் ரகம் குறித்து விவசாயி செந்தில் உமையரசி கூறியது:
 திருமணமான பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒரு அரிசி ஆகும். பெண்களுக்கு கர்ப்ப காலங்களிலும் பிறகு சுகப் பிரசவத்திற்கும் மிகுந்த பயன்களை வழங்கக் கூடியது இந்த பூங்கார் அரிசி ஆகும். அதேபோல மாப்பிள்ளை சம்பா திருமணமான ஆண்கள் சாப்பிட வேண்டிய அரிசி ஆகும். தாய்ப்பாலுக்கு அடுத்து உடனடியாக கஞ்சி வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய அரிசி பால் குடல் வாழை அரிசி ஆகும். 6 வயது முதல் 20 வயது வரை உடல் வளர்ச்சிக்கும் வலுவுக்கும் சாப்பிட வேண்டிய அரிசி தங்கச் சம்பா. கண் விழித்திரையை சரி செய்யும் வல்லமை படைத்த அரிசி கருடன் சம்பா. சர்க்கரை நோய் மற்றும் உடல் உறுப்புகளை சரி செய்யும் வல்லமை படைத்தது கருப்பு கவனி. சீரக சம்பா, தூயமல்லி, கிச்சடி சம்பா இதுபோன்ற சன்ன ரகங்கள் அனைத்து வயதினரும் அனைத்து நேரங்களிலும் சாப்பிடலாம்.
இது போல ஒரு பாரம்பரிய நெல் ரகங்களிலும் பலவிதமான பயன்களையும் சிறப்புத் தன்மைகளையும் கொண்டதாக இருப்பதோடு இதை வேளாண் செய்வதற்கு குறைந்தளவான செலவே நமக்கு ஆகும், லாபம் அதிகம் கிடைக்கும். கொரோனா தொற்று உலகிற்கே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது. நஞ்சில்லாத ஒரு உணவை பாரம்பரிய விவசாய முறையை பயன்படுத்தி ஒவ்வொரு விவசாயிகளும் தங்கள் வீட்டுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்து பயன்படுத்த வேண்டும் என்றார்.

Tags : Poonkar Paddy Planting Festival ,Needamangalam Rishiur ,
× RELATED நீடாமங்கலம் ரிஷியூரில் பாரம்பரிய பூங்கார் நெல் நடவு திருவிழா