×

சாலையோரம், நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் நிலமற்ற மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா உறுதி

மன்னார்குடி, மார்ச் 26: மன்னார்குடி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 3வது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரிச்சபுரம் ஊராட்சியில் இருந்து தனது 6ம் நாள் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.
தொடர்ந்து, புது தேவங்குடி, கீழாளவந்தச்சேரி, மேலாள வந்தச்சேரி, சித்தாம்பூர், வெள்ளக்குடி, அதங்குடி, ஆயக்குடி, பொதக்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் வேட்பாளர் டிஆர்பி ராஜா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள் உள்பட அனைவரையும் சந்தித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி மலர்ந்திடவும், மன்னை தொகுதி வளர்ச்சியடையவும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது வேட்பாளர் எம்எல்ஏ டிஆர்பி ராஜா பேசுகையில், கோரையாறு தலைப்பு ஆற்றில் புதிய அணை கட்டப்படும். நீடாமங்கலம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும். காளாச்சேரி ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும். பொதக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒன்றியத்தில் உள்ள சித்தாம்பூர், ரிஷியூர், ஒளிமதி, காளாச்சேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாலையோரம், நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் அனைத்து நிலமற்ற மக்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும். தேவைப்படும் ஊராட்சிகளில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டி கொடுப்பதோடு அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தி தரப்படும் என்றார்.
பிரசாரத்தின்போது, தேர்தல் பணிக்குழு தலைவர் தலையாமங்கலம் பாலு, முன்னாள் எம்எல்ஏ ஒரத்தநாடு ராஜமாணிக்கம், நீடா வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் விசு அண்ணாதுரை, சிபிஐ ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் உள்ளிட்ட திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,DRP ,Raja ,
× RELATED GST குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தகாத...