கோவை மாவட்ட புதிய கலெக்டராக நாகராஜன் பொறுப்பேற்பு

கோவை, மார்ச் 26: கோவை  மாவட்ட கலெக்டராக பதவி வகித்த ராஜாமணியை மாற்ற வேண்டும் என  எதிர்க்கட்சியினர் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து வந்தனர்.  இந்நிலையில் நேற்று முன் தினம் மதியம் தேர்தல் ஆணையம், புதிய உத்தரவை தமிழக தலைமை  செயலருக்கு அனுப்பி வைத்தது. அதில், கோவை மாவட்ட கலெக்டராக எஸ்.நாகராஜனை  நியமிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

இதன்படி கோவை மாவட்ட  கலெக்டர் ராஜாமணி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக நாகராஜன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று காலை கோவை மாவட்ட புதிய கலெக்டராக  பொறுப்பேற்று கொண்டார். இவர் கோவை மாவட்டத்தின் 181-வது மாவட்ட கலெக்டராவார்.

கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிட்ஸ் பிலானி பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியல் படிப்பும், அமெரிக்காவின் ஹார்டுவர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்படிப்பும் படித்துள்ளார்.

2005ம் ஆண்டு இந்திய குடிமை பணிக்கான போட்டித்தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து தேர்ச்சி பெற்று,  ஈரோடு மாவட்ட உதவி கலெக்டராக பயிற்சி பெற்றார். பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒசூர் சப்-கலெக்டராகவும், சிவகங்கை மாவட்டத்தில் கூடுதல் கலெக்டராகவும் பணியாற்றியுள்ளதோடு  மாவட்ட கலெக்டராக வேலூர், கன்னியாகுமாரி, தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலும் பணிபுரிந்துள்ளார்.

மேலும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கூடுதல் செயலர், உலக வங்கி சுகாதார மேம்பாட்டு திட்ட இயக்குநர், தகவல் தொழில்நுட்ப துறை இணை செயலாளர் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை இயக்குநர், ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குநர் ஆகிய மாநில அளவிலான பொறுப்புகளிலும் பணிபுரிந்துள்ளார். முன்னதாக சென்னையில் தொழில்முனைவோர் மேம்பாட்டு இயக்குநராக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று கோவை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று கொண்டார்.

Related Stories:

>