ஆர்டிஓ ஆய்வு பொதுமக்கள், கூட்டணிகட்சியினர் யாரையும் மதிக்காததால் ஒரத்தநாட்டில் வைத்திலிங்கத்தை தோற்கடிக்க கட்சியினர் தீவிரம்

தஞ்சை, மார்ச் 26: தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் நட்சத்திர அந்தஸ்து பெற்றது ஒரத்தநாடு தொகுதி. காரணம் முன்னாள் அமைச்சர், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர், மாநிலங்களவை உறுப்பினர், டெல்டா மாவட்டங்களில் பொறுப்பாளர் என பல்வேறு பதவிகளை வகிக்கும் வைத்திலிங்கம் எம்பி போட்டியிடுகிறார். ஒரத்தநாடு தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று, அதிமுகவில் நால்வர் அணியில் ஒருவராக இடம்பெற்றவர். கடந்த தேர்தலில் பெற்ற தோல்வி அடைந்த அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் என்னை தோற்கடித்துவிட்டார்கள் என கதறி அழுததால், மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கினார்.

தமிழக அரசியலில் வலம் வந்த அவருக்கு டெல்லி அரசியல் ஒத்துவரவில்லை. இதனால் தமிழகத்தில் முக்கிய இடத்தை பிடிக்க, சட்டமன்ற தேர்தலை எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் வைத்திலிங்கத்தை தோற்கடிக்க பல்வேறு வியூகங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

கடந்த தேர்தலில் அமமுக இல்லாத நிலையில் வைத்திலிங்கம் தோல்வியை சந்தித்தார். இந்த முறை வலுவான அமமுக வேட்பாளர் மா.சேகர் களத்தில் உள்ளார். இதனால் சேகர் கணிசமான ஓட்டை பிரிப்பார் என்பது உறுதியாகியுள்ளது. இதை உணர்ந்திருந்த வைத்தியலிங்கம் சசிகலா வெளியே வந்தும் அவரைப் பற்றி வாய் திறக்காமல் மவுனமானார்.

டெல்டா அரசியலில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பை காட்டி வந்த நிலையில் வைத்தியலிங்கம் அடக்கியே வாசித்தார். ஆனாலும் அவை எதுவும் கைகொடுக்காமல் தற்போது மா. சேகர் நிறுத்தப்பட்டுள்ளார். டிடிவி தினகரன் வைத்தியை குறிவைத்து பிரசாரம் மேற்கொண்டது அமமுகவினரை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது.

மேலும் சிட்டிங் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரனை மீண்டும் திமுக களமிறக்கிவிட்டுள்ளது. அவரது எளிமையே அவருக்கு ஒரத்தநாட்டில் மிகப்பெரிய பலமாக உள்ளது. வைத்திலிங்கத்தை குறிவைத்து திமுக தலைவர் ஒரே இடத்தில் பிரசாரம் மேற்கொண்டது வைத்திலிங்கத்திற்கு மேலும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் ஓட்டுக்கு 2000 ரூபாய் மற்றும் வீட்டுக்கு இரண்டு கிராம் காயின் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என கணக்கு போட்டு வந்த வைத்திலிங்கத்துக்கு மேலும் பேரிடியாய் வந்து விழுந்தது முத்தரையர் சமூக வேட்பாளர். அவரை வாபஸ் வாங்க கோரி கடைசி நிமிடம் வரை வைத்தி தரப்பில் கெஞ்சி கூத்தாடியும், பேரம் பேசியும் அவர் மசியவில்லை. அந்த வேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார் என தெரிகிறது.

அதிமுக கூட்டணியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம், தமிழ்த் தேசியக் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி என பல கட்சிகள் இருந்தும் அவர்களை வைத்திலிங்கம் பிரசாரத்துக்கு அழைக்காததால் அவர்கள் பிரசாரத்துக்கு செல்வதில்லை. இதனால் கடும் அதிர்ச்சியில் இருக்கும் அவர்கள் வேட்பாளருக்கு எதிராக உள்ளடி வேலையில் இறங்கியுள்ளனர். கட்சியினருக்கும் அவர் கண்டு கொள்ளாததால் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தொகுதி மக்களிடமும் வைத்திலிங்கம் செல்வாக்கை இழந்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஒரு முறை கூட சென்றதில்லையாம். அப்பகுதிக்கு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதனால் இங்கும் அவருக்கு எதிர்ப்பு அலையே வீசுகிறது. எனவே, இந்த முறையும் வைத்திலிங்கம் வெற்றி பெறுவது குதிரைக் கொம்புதான். இந்த முறை தோல்வி அடைந்தால் தனது அரசியல் வாழ்க்கை பயணம் கேள்விக்குறியாகி விடும் என்பதை நன்கு உணர்ந்த வைத்திலிங்கம் எப்படியும் வெற்றி பெற வேண்டுமென முனைப்புடன் செயலாற்றி வந்தாலும் சூழ்நிலைகள், வாய்ப்புகள், எதிர்வினைகள் அனைத்தும் அவருக்கு தோல்வி தவிர்க்க முடியாததாக அமைந்துள்ளது.

Related Stories:

>