ஈரோடு மேற்கு தொகுதியில் நீர் நிலைகள் புனரமைக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை

ஈரோடு,மார்ச்26: ஈரோடு மேற்கு தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் சு.முத்துசாமி நேற்று தொட்டம்பட்டி, மொகையன் பாளையம், தெற்குபாளையம், கங்காபுரம், சடையம்பாளையம், கொங்கம்பாளையம், எல்விபி காலனி, கொங்கம்பாளையம் காலனி, ஆவுடையன் காடு, ஆயப்பாளி, மேட்டையன் காடு, சூரிப்பாறை, தட்டங்காடு, எல்லப்பாளையம், மாமரத்துப்பாளையம், ஆண்டிக்காடு, பசும்பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடம் சு.முத்துசாமி கூறியதாவது: ஈரோடு மேற்கு தொகுதியில் உள்ள நீர் நிலைகளை புனரமைத்து, நிலத்தடி நீர் மட்டம் உயர நடவடிக்கை எடுக்கப்படும்.

பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளில் தொழிற்சாலை, குடியிருப்புகளின் கழிவு நீர் கலப்பதை தடுத்து, மழை நீர் வடிகாலாக மாற்றப்படும். மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் தார் சாலை, குடிநீர் வசதி, மின்சார வசதி இல்லாமல் உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைத்ததும் இந்த பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து பகுதிகளிலும் தார் சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். ஈரோடு-சத்தி செல்லும் சாலை, ஈரோடு-நசியனூர் சாலைகள் விரிவாக்கம் செய்து, சாலை பாதுகாப்பு மேம்படுத்தப்படும். அ.தி.மு.க., அரசு கொரோனா ஊரடங்கின்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. தி.மு.க., சார்பில் எவ்வித கட்சி வேறுபாடும் இன்றி அனைத்து மக்களுக்கும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.  

மக்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முக கவசம், கபசுர குடிநீர் வீடு வீடாக வழங்கப்பட்டது. ஊரடங்கின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தினார். ஆனால், அந்த உதவித் தொகையை அளிக்க அதிமுக அரசு முன்வரவில்லை. தி.மு.க., ஆட்சி அமைந்ததும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4ஆயிரம் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். அதுமட்டும் அல்லாமல் தமிழகத்தின் உள்ள அனைத்து மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் தி.மு.க., தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. எனவே, தி.மு.க., தலைவர் மு.க., ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>