தஞ்சை அருகே பயங்கரம் இரும்பு கம்பியால் அடித்து முதியவர் படுகொலை பெண் உள்பட 3 பேர் கைது

தஞ்சை, மார்ச் 26: தஞ்சை அருகே முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை அருகே திருமலைசமுத்திரம் வடக்கு குளத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி மலர்கொடி (55). பழனிவேல் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிங்கராசு(70) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன் மலர்கொடி வீட்டின் அருகே அமர்ந்திருந்தார். மலர்கொடிக்கு சிங்கராசு உறவினர் ஆவார். இரவு 10 மணியளவில் மலர்கொடி அங்கு வந்தபோது சிங்கராசு அவரிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் மலர்கொடி கூச்சலிடவே அங்கிருந்து சிங்கராசு ஓடிவிட்டார்.

இந்நிலையில் மலர்கொடி தனது அண்ணன் மகன்களுக்கு போன் செய்து நடந்த விவரத்தை கூறினார். உடனே அண்ணன் மகன்களான பிரவீன்(24), பாண்டியராஜன்(30) ஆகியோர் அங்கு வந்து மலர்கொடியை பைக்கில் ஏற்றிக் கொண்டு சிங்கராசை தேடி சென்றனர். அப்போது சிங்கராசு தஞ்சை-திருச்சி சாலையில் திருமலைசமுத்திரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது சிங்கராசை இரு வாலிபர்களும் தட்டி கேட்டபோது தகராறு ஏற்பட்டது. உடனே அங்கு கிடந்த இரும்பு கம்பியால் சிங்கராசை பிரவீன், பாண்டியராஜன் ஆகியோர் தாக்கினர். இதில் படுகாயத்துடன் சிங்கராசு மயங்கி விழுந்தார். இதையடுத்து மலர்கொடி, பிரவீன், பாண்டியராஜன் ஆகியோர் அங்கிருந்து ஓடிவிட்டனர். பலத்த காயத்துடன் கிடந்த சிங்கராசுவை அருகிலிருந்தோர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக சிங்கராசு இறந்தார். இச்சம்பவம் குறித்து சிங்கராசு மகன் சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலர்கொடி, பிரவீன், பாண்டியராஜன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Related Stories:

>