×

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் சேதுபாவாசத்திரம் பகுதியில் மீன்பிடி துறைமுக முகத்துவாரங்கள் தூர்வார வேண்டும் நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை

சேதுபாவாசத்திரம்,மார்ச் 26: சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுக முகத்துவாரங்கள் தூர்வாரப்பட வேண்டும் என நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சங்க தலைவர் ஜெயபால் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிபட்டிணம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 148 விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகுகளுக்கு என்று மல்லிபட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் பகுதியில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டு துறைமுகமாக செயல்பட்டு வருகிறது. அதேசமயம் கொள்ளுக்காடு, புதுப்பட்டிணம், மல்லிபட்டிணம், சின்னமனை, பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமம்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், அடைக்கத்தேவன், மந்திரிபட்டிணம், அண்ணாநகர் புதுதெரு, செம்பியன்மாதேவி பட்டிணம், கணேசபுரம் உட்பட 32க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளன. இந்த படங்களுக்கு என்று ஆங்காங்கே மீன்பிடி துறைமுகங்கள் செயல்பட்டு வருகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள் அனைத்தும் முகத்துவாரங்களில் மணல் மேடாகி தூர்ந்து போய்விட்டது. இதனால் நாட்டுப்படகுகளை முகத்துவாரங்களுக்கு கொண்டு வரமுடியாமல் சுமார் 500 மீட்டர் முதல் ஒரு சில இடங்களில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் நிறுத்திவிட்டு. பிடித்து வரக்கூடிய மீன் மற்றும் கரை சேர்க்க வேண்டிய வலை போன்ற தளவாட பொருட்களை கொண்டு வருவதற்கு மீனவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் மழை வெள்ளம் மற்றும் புயல் காலங்களில் படகுகளை பாதுகாக்க துறைமுகங்களுக்கு கொண்டு வரமுடியாமல் வடிகால் வாரி மற்றும் பள்ளம் உள்ள இடங்களில் படகுகளை கொண்டு வந்து சேர்த்து பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. ஒரு சில இடங்களில் சொந்த செலவிலேயே முகத்துவாரங்கள் மீனவர்கள் தூர்வாரி உள்ளனர். அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் செவிசாய்க்கவில்லை. எனவே முகத்துவாரம் களை தூர்வாரி நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனக் கூறினார்.

Tags : Sethupavasathiram ,
× RELATED சேதுபாவாசத்திரம் ஒன்றியம்...