×

மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் படிக்காதவர்களே இருக்க திமுக வேட்பாளர் மெய்யநாதனை ஆதரித்து சுப. வீரபாண்டியன் பிரசாரம்

அறந்தாங்கி, மார்ச் 26: மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபிறகு தமிழ்நாட்டில் படிக்காத பிள்ளைகளே இருக்க மாட்டார்கள் என்று ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதனை ஆதரித்து பிரசார கூட்டத்தில் சுப.வீரபாண்டியன் பேசினார்.
ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொத்தமங்கலத்தில் திமுக வேட்பாளர் மெய்யநாதனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை வகித்தார் . திமுக தேர்தல் பணிக் குழு செயலாளர் பரணி கார்த்திகேயன், திமுக ஒன்றிய செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனர் சுப. வீரபாண்டியன் பேசியதாவது: மு.க.ஸ்டாலின் தான் முதல்வராக வரவேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் 176 நாட்கள் நடந்த போராட்டத்தில் 46 நாட்கள் இரவு பகலாக போராட்டக்காரர்களோடு இருந்து போராடியவர் மெய்யநாதன். அதேபோல் கஜா புயல் பாதிப்பின் போது புயல் தாக்கிய மூன்றாவது நாளே ஸ்டாலினை அழைத்து வந்து பாதித்த பகுதிகளை பார்வையிட வைத்து பல்வேறு உதவிகளை வழங்கியவர். பொதுமக்களிடம் ஸ்டாலின் வாங்கிய லட்சக்கணக்கான மனுக்களுக்கு அவர் பதவியேற்ற 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இதற்காக தனியாக ஒரு சிறப்பு குழுவை அமைக்க உள்ளார்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளாக 505 வாக்குறுதிகளை ஸ்டாலின் தந்துள்ளார். அவை ஒவ்வொரு மாவட்டத்திற்கு, தாலுகாவிற்கு, தொகுதிக்கு என்னென்ன நலத்திட்டங்கள் என்று குறிப்பிட்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். முதியோர் உதவித்தொகை 1500 ஆக மீண்டும் வரவிருக்கிறது. நீட் தேர்வை கொண்டுவந்து தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்தது அதிமுக அரசு .
மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் படிக்காத பிள்ளைகளே இருக்க மாட்டார்கள். 2013ல் மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்றபோது சிலிண்டர் 419 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது 820 ரூபாய். பெட்ரோல் 71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 93 ரூபாய் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மீண்டும் சீராக உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார். கூட்டத்தில், திராவிடர் கழக நிர்வாகி ராவணன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட குழு உறுப்பினர் செங்கோடன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : MK Stalin ,DMK ,Meyyanathan ,Tamil Nadu ,Veerapandian ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...