புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க அதிகாரிகள் ஆய்வு

புதுக்கோட்டை, மார்ச் 26: புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுபானங்கள் விற்பனை தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உமாமகேஸ்வரி தலைமையில், எஸ்பி பாலாஜி சரவணன் முன்னிலையில் தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான உமா மகேஸ்வரி தெரிவித்ததாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 3 பறக்கும்படைகள் குழு, 3 நிலையான கண்காணிப்பு குழு மற்றும் 1 வீடியே கண்காணிப்பு குழு என 7 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், 8 சுழற்சி முறையில் இயங்கி வருகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதுடன், சோதனைச் சாவடிகளும் அடிக்கடி மாற்றப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து வரக்கூடிய அனைத்து புகார்களையும் 24 மணிநேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த புகார் தாரர்களுக்கு நடவடிக்கைகளின் விவரங்களையும் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.

தேர்தலுக்கு இடையூறாக குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்கள் மீது காவல் துறையின் மூலம் வழக்கு பதிவு செய்து குற்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய தினம் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள குழுவின் தலைவர்கள் 21 நபர்கள் வீதம் 120 க்கும் மேற்பட்ட அலுவலர்களுக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் ஆகியோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆய்வுகளின் போது கைப்பற்றப்படும் பொருட்களை கையாலும் வழிமுறைகள் குறித்தும், அதன் பிறகு காவல் துறையினர் மூலம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள 144 அரசு மதுபான கடைகள் மற்றும் உரிமம் பெற்ற 9 தனியார் மதுவிற்பனை கூடங்கள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஏப்ரல் 4,5 மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ம் தேதியும் அரசு மதுபானக்கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும். இந்நாட்களில் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிப்பது குறித்தும் காவல்துறையுடன் உரிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்திட சம்மந்தப்பட்ட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில் டிஆர்ஓ சரவணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

>