×

காவிரி-வைகை-குண்டாறு திட்டம் விவசாயிகளின் வாழ்வை உயர்த்தும் விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் பேச்சு

புதுக்கோட்டை, மார்ச் 26: காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் விவசாயிகளின் வாழ்வை உயர்த்தும் என்று விராலிமலை சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வாக்காளர்களிடையே பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட ஆவூர், தெற்குபுதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிரமாக வாக்குசேகரித்தார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள், பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆவூர் பங்கு தந்தையிடம் விஜயபாஸ்கர் ஆசீர்வாதம் பெற்றார். தெற்குபுதுபட்டி பகுதியில் ஒரு குழந்தைக்கு விஜயபாஸ்கர் என்று பெயர் சூட்டினார். பிரசாரத்தின்போது
பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: வரலாற்று சிறப்பு மிக்க காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் இந்த பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பும். நிலத்தடி நீர் உயரும். விவசாயிகளின் வாழ்வு உயரும். இதேபோல் பலத்திட்டங்களை கொண்டு வர பாடுபடுவேன்.
கடந்த 10 ஆண்டுகளில் விராலிமலை தொகுதியை மாற்றி காட்டியுள்ளேன். நான் செல்லும் இடமெல்லாம் நீங்கள், எங்கள் வீட்டு பிள்ளை உங்களுக்கு தான் வாக்களிப்போம் என்று கூறுவதை கேட்கும்போது சந்தோஷமாகவும், மனநிறைவாகவும் உள்ளது. நான் என்றும் உங்களுக்காக உழைப்பேன். இன்பத்திலும், துன்பத்திலும் என்றும் உங்களோடு இருப்பேன் என்றார். மேலும் விவசாய கடன், நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை அதிமுக அரசு வழங்கியுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு வாஷிங் மெஷின், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் தொகுதிக்கு கொண்டு வந்துள்ள வளர்ச்சி திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. மேலும் உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன். எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை மக்களுக்காக உழைப்பேன் என்றார்.
உங்களுக்கு உழைத்த எனக்கு நீங்கள் ஓட்டளிப்பதே சரியான தீர்ப்பாக அமையும். மீண்டும் அதிமுக ஆட்சியமைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,Vijayabaskar ,Viralimalai ,Cauvery ,Gundaru ,
× RELATED சொத்துகுவிப்பு வழக்கு: அதிமுக...