×

6 சட்டசபை தொகுதிகளில் தபால் வாக்களிக்க மாற்றுதிறனாளிகள் மூத்தகுடிமக்கள் 3,801 பேர் விருப்ப படிவம்

நாகை: நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் மாற்றுத்திறனாளிகள், மூத்தகுடிமக்கள் 3 ஆயிரத்து 801 நபர்கள் தபால் வாக்களிக்க விருப்ப படிவம் வழங்கி உள்ளனர் என கலெக்டர் பிரவீன்பிநாயர் கூறினார்.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் பிரவீன்பிநாயர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் வரும் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 100 சதவீதம் நேர்மையான வாக்குப்பதிவை எட்டுவதற்காக தினந்தோறும் வாக்காளர்களை கவரும் வகையில் அரசுத்துறை வாயிலாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
தோட்டக் கலைத்துறை சார்பில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு வீடியோ வாகனம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் குறைவான அளவிற்கு வாக்குகள் பதிவாகி உள்ள வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டறிந்த பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாயிலாக வாக்களிக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தபட்டவர்கள் தன் விருப்பத்தின் பேரில் தபால் வாக்கு அளிக்க விருப்ப படிவம் 12டி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த மூன்று வகையான வாக்காளர்களில் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 2 ஆயிரத்து 720 நபர்களும், மாற்றுத்திறனாளிகள் ஆயிரத்து 81 நபர்களும் மொத்தம் 3 ஆயிரத்து 801 நபர்கள் தபால் வாக்களிக்க விருப்ப படிவம் வழங்கி உள்ளனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களாக 711 அழைப்புகளும், தேர்தல் தொடர்பான புகார்களாக 9 அழைப்புகளும் மொத்தம் 720 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது என்றார்.
மாவட்ட வன அலுவலர் கலாநிதி, டிஆர்ஓ இந்துமதி, பயிற்சி உதவி கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட தோட்டக் கலைத்துறை துணை இயக்குனர் கலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு