அதிமுக பிரமுகர் ஜாமீன் கேட்டு மனு ரவுடி மனைவிக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவு

சேலம், மார்ச் 26: சேலம் ரவுடி கொலை வழக்கில் ஜாமீன்கேட்ட அதிமுக பிரமுகரின் மனு குறித்து, ரவுடியின் மனைவிக்கு நோட்டீஸ் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரவுடி செல்லதுரை, கடந்த டிசம்பர் மாதம் 22ம்தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதில் உள்ளூர் ரவுடிகளும், வெளியூரைச் சேர்ந்த கூலிப்படையினரும் கொலையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. ஒரு ரவுடியை கொலை செய்ய 32 பேர் கைது செய்யப்பட்டது இதுவே முதன்முறையாகும். இதில் நாகர்கோவிலை சேர்ந்த சேட்டன் என்ற ரவுடி மட்டும் தலைமறைவாக உள்ளார். இந்த கொலை நடந்து 92 நாட்களை கடந்து விட்ட நிலையில், சிறையில் இருப்பவர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். அதன்படி அதிமுக வட்ட செயலாளர் பழனிசாமியின் ஜாமீன் மனு, நேற்று மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தாழ்த்தப்பட்டோர் ஒருவர் கொலை செய்யப்பட்டால், குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீன் கேட்டால், அதுகுறித்து பாதிக்கப்பட்ட புகார்தாரருக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும் என சட்டத்தில் உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட புகார்தாரருக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்ட நீதிபதி குமரகுரு, மனுவை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்தார். கொலையான ரவுடி செல்லதுரையின் மனைவி தான் இவ்வழக்கின் புகார்தாரர்.இதற்கிடையில் சிறையில் இருக்கும் சாணக்கியா, புஜிக்கி சுரேஷ், சின்னவர், பிரபு, காதர்உசேன், இளையராஜா, யுவராஜ், சாரதி, கருவாபாலு(எ)பாலமுருகன், விக்கி(எ)விக்னேஸ்வரன் ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்த தண்டி(எ) ஜெயக்குமார்(28) குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: