தூத்துக்குடி மாவட்டத்தில் காசநோயால் பாதிக்கப்பட்ட 972 பேருக்கு சிகிச்சை

தூத்துக்குடி, மார்ச் 26: தூத்துக்குடி மாவட்டத்தில் காசநோயால் பாதிப்புக்கு உள்ளான 972 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவப் பணிகளுக்கான (காசநோய் பிரிவு திட்டம்) துணை இயக்குநர் டாக்டர் சுந்தரலிங்கம்  தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட காசநோய் பிரிவு அலுவலகத்தில் உலக காசநோய் தினம்  நடந்தது. மாவட்ட நலக்கல்வியாளர் தங்கவேல் வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நலப்பணிகளுக்கான இணை இயக்குநர் முருகவேல்  காசநோய் விழிப்புணர்வு விளம்பர பதாகையை வெளியிட்டு, விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற காசநோய் பிரிவு பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார். இதைத்தொடர்ந்து மாவட்ட மருத்துவப் பணிகளுக்கான (காசநோய் பிரிவு திட்ட) துணை இயக்குநர் சுந்தரலிங்கம் திட்டம்  விளக்கவுரையாற்றினார்.ஓய்வுபெற்ற மருத்துவப் பணிகளுக்கான துணை இயக்குநர் (காசம்) சுப்பையா, மாவட்ட காசநோய் மைய மருத்துவ அலுவலர் ஆல்பர் சேக்ரட் செல்வின் ஆகியோர் குறித்து பேசினர்.  நிகழ்ச்சியில் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட கீழஈரால் காசநோய் பிரிவுக்கு முதல் பரிசும், ஒட்டநத்தம் காசநோய் பிரிவுக்கு 2ம் பரிசும் வழங்கப்பட்டது. காசநோய் பணியாளர்களுக்கு பணியிட மன அழுத்தத்தை போக்குவது குறித்து  மனநல மருத்துவர் சிவசைலம் பேசினார். உலக காசநோய் தினம் குறித்து மாவட்ட மருத்துவப் பணிகளுக்கான (காசம்) துணை இயக்குநர் சுந்தரலிங்கம் பேசுகையில்,‘‘ காசநோயை கண்டறிய சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே சோதனை ஆகிய இரு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தற்போது காசநோயை எளிதில் கண்டறிய சிபிநாட் என்ற நவீன கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய காசநோய் அகற்றும் திட்டத்தின் கீழ் வரும் 2025-ம் ஆண்டில் காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 972 காசநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 909 பேர் முதல் நிலை காசநோயாளிகள். இதில் 64 பேர் குழந்தைகள் ஆவர். மேலும் எய்ட்ஸ் நோய் உள்ள காசநோயாளிகள் 16 பேர் ஆவர். மேலும், மாவட்டத்தில் 63 வீரிய காசநோயாளிகள் உள்ளனர். தற்போது இந்தியாவில் 1 லட்சத்தில்  200 பேர்  காசநோயாளிகள் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலும் அதே நிலையில் தான் இருக்கின்றனர். இதையடுத்து 1 லட்சம் பேருக்கு 34 காசநோயாளிகள் என்ற நிலைக்கு கொண்டுவர என இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம் என்றார்.  தீர்வு முறை அமைப்பாளர் குப்புசாமி நன்றி கூறினார்.

Related Stories:

>