×

பட்டா வழங்காததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க முடிவு வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றினர் குடியாத்தத்தில் பரபரப்பு

குடியாத்தம், மார்ச் 26: குடியாத்தத்தில் பட்டா வழங்காததை கண்டித்து தேர்தலை மக்கள் புறக்கணிக்க முடிவு செய்த பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர். குடியாத்தம் 4 முனை சந்திப்பு ரோடு, காட்பாடி ரோடு பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட ஆதி ஆந்திரா சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல வருடங்களாக குடியாத்தம் நகராட்சியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பட்டா வழங்க கோரி பல ஆண்டுகளாக கலெக்டர், நகராட்சி நிர்வாகத்தினரிடம் மனு அளித்து வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மேலும், பட்டா வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனாலும், அதிகாரிகள் இவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லையாம். இந்த நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்றுக்கூடி அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.மேலும், அப்பகுதி முழுவதும் நேற்று தேர்தலை புறக்கணிப்பதாக கருப்புக்கொடியினை வீடுகளில் கட்டினர். மேலும், அப்பகுதி நுழை வாயிலில் ஆதி ஆந்திரா சமூகத்தை சார்ந்தவர் நாங்கள். இங்கு கடந்த 1912ம் ஆண்டு முதல் வசித்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்காததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்.இந்நிலையில், திடீரென அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து குடியாத்தம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷேக் மன்சூர், டிஎஸ்பி தரன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Patta ,
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி