×

பெரியபாளையம் அருகே மழையால் சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்

ஊத்துக்கோட்டை, மார்ச் 26: பெரியபாளையம் அருகே சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க ₹ 18 கோடி  செலவில்  தொடங்கிய நிலையில்,  மழையால்  நிறுத்தப்பட்ட பணிகள் தற்போது மீண்டும் தொடங்கியது. பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என திருக்கண்டலம், குருவாயல், சேத்துப்பாக்கம், ஆரிக்கப்பேடு உள்ளிட்ட 10 கிராம விவசாயிகள்  கோரிக்கை வைத்தனர். அதன்படி, கடந்த 2014ம் ஆண்டு ₹ 33 கோடி செலவில் திருக்கண்டலம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை, 2015ம் ஆண்டு ஏற்பட்ட வர்தா புயலின் வெள்ளப்பெருக்கால் பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்ட மழை நீரால் அடித்து செல்லப்பட்டு தடுப்பணை இரண்டாக உடைந்தது. இந்நிலையில், இதை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, 5 வருடங்களுக்கு பிறகு ₹ 18 கோடி செலவில் தடுப்பணையை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கியது.  அதன்படி,  கடந்த வருடம் மார்ச் மாதம்  தடுப்பணை சீரமைக்கும்  பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. அதன்பிறகு,  கடந்த அக்டோபர் - நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை பெய்து வந்ததால் தடுப்பணை  பணிகள் நடைபெறும் இடத்தில் மழைநீர் தேங்கி நின்றது.  இதனால், தற்காலிகமாக   பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள் மீண்டும் தற்போது தொடங்கி வேகமாக  நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘திருக்கண்டலம் தடுப்பணை பணிகள் இன்னும் 2 மாதத்தில் முடியும்’ என தெரிவித்தனர்.

Tags : Periyapalayam ,
× RELATED ஏரியில் அளவுக்கு அதிகமாக சவுடு மண்...