×

வீரராகவ பெருமாள் கோயில் குளத்திற்கு தேர்தல் விதி மீறி கால்வாய் பணி

திருவள்ளூர், மார்ச் 26: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் குளத்திற்கு சுமார் ₹25 கோடி மதிப்பில் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கோயில் தனியார் அகோபிலமடத்திற்கு சொந்தமானது. அரசின் நிதி அரசுக்கு சொந்தமான கோயில்களுக்கு தான் செலவு செய்ய வேண்டும். எந்த சட்டத்தின் அடிப்படையில் கொண்டு வந்தார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.வீரராகவ பெருமாள் கோவில் குளத்திற்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம் தேவையில்லாத திட்டம்.இந்த கோயில் குளம் கடந்ந 2015 ல் மழையின் போது தண்ணீர் நிரம்பி விட்டது. தேர்தல் அறிவித்த பிறகும் கோயில் குளத்திற்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தின் மூலம் திருவள்ளூர் நகராட்சி 3 வது வார்டு காமராஜர் சாலையில்  பள்ளம் தோண்டப்பட்டு மிகப் பெரிய மேடாக மண் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் முன்னாள் நகரமன்ற தலைவர் தி.ராசகுமார் தலைமையில் பஜார் வழியே இந்த திட்டத்தை கொண்டு வராமல் மாற்று வழியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்திருந்தனர். ஆனால் தொடர்ந்து திட்டமிட்ட பாதையில் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் வியாபாரிகள் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனைத் தொடர்ந்து வியாபாரிகள் வணிகர் சங்க  பேரவையின் மாநில தலைவர் த.வெள்ளையனிடம் புகார் கொடுத்திருந்தனர். அதன் பேரில் வணிகர் சங்க  பேரவையின் மாநில தலைவர் த.வெள்ளையன் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தை பார்வையிட்டு மிகக் கடும் கண்டனத்தை தெரிவித்தார். தமிழக அரசின் பணம் வீணாவதுமட்டுமல்லாமல் தேர்தல் தேதி அறிவித்த பிறகும், வேட்பாளர் அறிவித்த பிறகும்  இதனை தடுத்து நிறுத்தாமல், பணிகளை மேற்கொண்டுவரும் ஒப்பந்ததாரர் மீதும் மற்றும் அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கும்படி த.வெள்ளையன் கலெக்டரிடம் கேட்டுக் கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் நகரமன்ற தலைவர் தி.ராசகுமார் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Veeraragava Perumal ,
× RELATED திருவள்ளூர்  வைத்திய வீரராகவர்...