×

ஓட்டேரியில் புதிதாக ரயில் நிலையம்: அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் வாக்குறுதி

கூடுவாஞ்சேரி மார்ச் 26: நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொது மருத்துவமனையாக மாற்ற பாடுபடுவேன் என செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் கஜா (எ) கஜேந்திரன் பொது மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் செங்கல்பட்டு தொகுதியில் கஜா (எ) கஜேந்திரன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தொகுதிக்கு உட்பட்ட மண்ணிவாக்கம், வண்டலூர், ஊனைமாஞ்சேரி, நெடுங்குன்றம் ஆகிய ஊராட்சிகளில் நேற்று வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு அதிமுக, பாமக, பாஜ, புரட்சிபாரதம் உள்பட கூட்டணி கட்சியினர் வழியெங்கும் ஆரவாரத்துடன் பட்டாசு வெடித்து, மாலை மற்றும் சால்வை அணிவித்து, கிரீடம் சூட்டி உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர்.

அப்போது, அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் பேசுகையில், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியத்தில் 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 45க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நந்திவரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடி முதலுதவி உள்பட பல்வேறு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், விபத்து மற்றும் அவசர ஆபத்து என்றால் 25 கிமீ தூரத்தில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதேபோல், ஓட்டேரியில் உள்ள வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு வரும் வெளியூர் பார்வையாளர்கள், சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்பட புறநகர் பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருபவர்களும், வெளியூர் சென்று வரும் பொதுமக்களும், வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை ஓரத்தில் உள்ள பல்வேறு கிராம மக்களும் வண்டலூர் ரயில் நிலையத்தில் இறங்கி 3 கிமீ தூரத்தில் உள்ள ஓட்டேரி பகுதிக்கு நடந்து சென்று வர வேண்டிய நிலை உள்ளது.இந்தநிலை மாற வேண்டும் என்றால் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்போது, நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொது மருத்துவமனையாகவும், ஓட்டேரியில் ரயில் நிலையம் அமையக்கவும், படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் பாடுபடுவேன் என்றார்.

Tags : Otteri ,AIADMK ,Gajendran ,
× RELATED சென்னை ஓட்டேரியில் ரவுடிகள் மீது மர்ம...