வாலாஜாபாத் பேரூராட்சி 4வது வார்டில் பயன்படாமல் கிடக்கும் மினி மோட்டார் தண்ணீர் தொட்டி: தண்ணீருக்காக குடங்களுடன் அலையும் மக்கள்

வாலாஜாபாத், மார்ச் 26: வாலாஜாபாத் பேரூராட்சி 4வது வார்டில், பயன்படாமல் உள்ள மினி மோட்டார் தண்ணீர் தொட்டியை அதிகாரிகள் சீரமைக்காமல் உள்ளதால், பொதுமக்கள் தண்ணீருக்காக காலி குடங்களுடன் அலைகின்றனர்.

வாலாஜாபாத் பேரூராட்சி 4வது வார்டு இந்திரா நகரில் 50க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள  சமுதாயக்கூடம் அருகில் ஒரு மினி மோட்டாருடன் கூடிய தண்ணீர் தொட்டி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இதையொட்டி, இப்பகுதி மக்கள், அங்கு குடிநீர் பிடித்து, பயனடைந்தனர்.இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த மினி மோட்டார் தண்ணீர் தொட்டி பழுதானது. இதனை   சீரமைத்து தர வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள், பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில் வாலாஜாபாத் இந்திராநகர் பகுதியில் உள்ள மினி மோட்டார் தண்ணீர் தொட்டி மூலம் இப்பகுதி மக்கள் பயனடைந்து வந்தோம். பேரூராட்சி மூலம் விநியோகிக்கப்படும் பாலாற்று குடிநீர்  குழாய்களில் பழுது ஏற்பட்டால். இந்த மினி மோட்டார் தண்ணீர் தொட்டியில் நீரை, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தி வருவது வாடிக்கையாக இருந்தது.

ஆனால், தற்போது இங்குள்ள மினி மோட்டார் தண்ணீர் தொட்டி பயன்பாடின்றி பாழடைந்து காணப்படுகிறது. இதனால் வீட்டு உபயோகத்தில் பயன்படுத்த தண்ணீர் இல்லாமல், காலி குடங்களுடன் பல இடங்களுக்கு அலைந்து, திரிந்து தண்ணீர் பிடித்து வருகிறோம். மேலும், கோடைகாலத்தில் குடிநீரின் தேவை அதிகரிக்கும் நிலையில், இதுபோன்ற, மினி மோட்டார் தண்ணீர் தொட்டி எங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும். கோடை காலத்துக்கு முன்பு பாழடைந்து கிடக்கும் மினிமோட்டார் தண்ணீர் தொட்டியை சீரமைத்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், நாங்கள் குடிநீருக்காக அலைய வேண்டியதில்லை என்றனர்.எனவே, மேற்கண்ட பகுதி மக்கள் பிரச்னையில் பேரூராட்சி நிர்வாகம் தலையிட்டு உடனடியாக இந்த மினி மோட்டார் தண்ணீர் தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: