நான்கு தொகுதிக்கும் தயார் நிலையில் வாக்கு இயந்திரங்கள்

சிவகங்கை, மார்ச் 26:  சிவகங்கையில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6ல் நடக்க உள்ளது. இதற்கான தயாரிப்பு பணிகளை கடந்த சில மாதங்களாக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை(தனி), சிவகங்கை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. காரைக்குடியில் 345, திருப்பத்தூரில் 334, சிவகங்கையில் 348, மானாமதுரையில் 321 என மொத்தம் ஆயிரத்து 348 வாக்குச்சாவடிகள் இருந்தன. இந்நிலையில் 1,050க்கும் மேற்பட்ட வாக்காளர் உள்ள இடங்களில் வாக்குசாவடிகளை 2ஆக பிரித்ததன் அடிப்படையில் தற்போது நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 1,679 வாக்குசாவடிகள் உள்ளன.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ள வாக்கு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் வாக்களித்த விபரம் அறியும் இயந்திரங்கள் ஆகியன சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்த இயந்திரங்களில் ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தலின் போது ஒட்டப்பட்டுள்ள சின்னம், வேட்பாளர் பெயர் உள்ள தாள்களை அகற்றுதல், பதிவுகளை அழித்தல், பட்டன்களின் செயல்பாடுகளை சரிபார்த்தல், வாக்குகள் பதிவாகிறதா என ஒவ்வொரு இயந்திரமும் பரிசோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தன. இவைகள் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. காரைக்குடி தொகுதிக்கு 532 வாக்கு இயந்திரங்கள், 532 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 576வாக்களிக்கும் விபரம் குறித்த இயந்திரம் என ஆயிரத்து 640 இயந்திரங்கள், மானாமதுரை(தனி) தொகுதிக்கு 479 வாக்கு இயந்திரம், 479 கட்டுப்பாட்டு இயந்திரம், 519வாக்களிக்கும் விபரம் குறித்த இயந்திரம் என மொத்தம் ஆயிரத்து 477 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 492வாக்கு இயந்திரம், 492கட்டுப்பாட்டு இயந்திரம், 533வாக்களிக்கும் விபரம் குறித்த இயந்திரம் என மொத்தம் ஆயிரத்து 517 இயந்திரங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இத்தொகுதிக்கு மட்டும் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதால் மேலும் 492வாக்கு இயந்திரங்கள் சிவகங்கையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லும் வரை சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும்.

Related Stories:

>