×

பறக்கும் படையுடன் மத்திய பாதுகாப்பு படை இணைந்து வாகன சோதனை

சிவகங்கை, மார்ச் 26:  சிவகங்கை மாவட்டத்தில் பறக்கும் படையினருடன் இணைந்து மத்திய பாதுகாப்பு படையினரும்(சிஆர்பிஎப்) வாகன பரிசோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஏப்.6ல் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்.26ல் வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பல்வேறு நடத்தை விதிகள் இருந்தாலும் வாகன பரிசோதனையில் தேர்தல் கமிஷன் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வாகனங்கள் மூலமாக பணம், பரிசு பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செக்போஸ்ட்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் சிவகங்கையில் 3, மானாமதுரை 2, காரைக்குடி 3, தேவகோட்டை 2, திருப்பத்தூரில் 3 என மொத்தம் 13 செக்போஸ்டுகள் உள்ளன.

இந்நிலையில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் ஒரு துணை ஆணையர் தலைமையில் 159 போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மாவட்ட எல்கையில் உள்ள செக்போஸ்டுகள், பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களுடன் இணைந்து வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பதட்டமான வாக்குசச்சாவடிகள், பிரச்னைக்குறிய கிராமங்களிலும் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேர்தல் அலுவலர் ஒருவர் கூறியதாவது, தேர்தல் நெருங்குவதால் டூவீலர், கார், வேன், லாரி உள்ளிட்ட தனியார் வாகனங்கள் அனைத்தும் பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் பரிசோதனைக்கு பின்பே அனுப்பப்படுகின்றன.

 ஏற்கனவே பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீசார் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது மத்திய படையும் அவர்களுடன் இணைந்துள்ளது. தேவையான இடங்களில் மத்திய படை கூடுதலாக பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் நாள் வரை தற்போதைய பணியிலேயே அவர்கள் ஈடுபடுவர் என்றார்.

Tags : Flying Squadron Central Security Force ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283...