விவசாயிகள் மின் மோட்டார் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் அர.சக்கரபாணி எம்எல்ஏ உறுதி

ஒட்டன்சத்திரம், மார்ச் 26: ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி எம்எல்ஏ, நேற்று தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, திருவாண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘திமுக ஆட்சியில் தொகுதி முழுவதும் 30க்கும் அதிகமான அரசுப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. ரூ.21 கோடியில் நல்லதங்காள் அணைத்திட்டம் கொண்டுவரப்பட்டது. சுற்றியுள்ள 50 கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அணை அமைக்கப்பட்டது. தொகுதியில் உள்ள பல இடங்களில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. ஆட்சி அமைந்தவுடன் தூய்மை பணியாளர் அனைவருக்கும் நிரந்தர அரசு வேலை வழங்கப்படும், விவசாயிகள் மின் மோட்டார் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

ஒட்டன்சத்திரம் வட்டம், கொத்தயத்தில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான 300 ஏக்கரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். கலிக்கநாயக்கன்பட்டி குளத்திலிருந்து தொப்பம்பட்டி அரண்மனைகுளத்திற்கு புதிய வாய்க்கால் வெட்டி நீர் கொண்டு வரப்படும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பழநிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு இலவசமாக தங்குவதற்காக நெடுஞ்சாலையில் சமுதாயக்கூடம் அமைக்கப்படும். கால்நடை மருந்தகம் இல்லாத ஊராட்சியில் கால்நடைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கால்நடை மருந்தகம் உருவாக்கித்தரப்படும்’’ என்றார். பிரசாரத்தில் ஒன்றிய செயலாளர் தங்கராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: