×

நாகர்கோவிலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் 200 பேர் பங்கேற்பு

நாகர்கோவில், மார்ச் 26: குமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, நடைபெற்ற மினி மாரத்தானில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்டும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணம் மற்றும் பரிசுப்பொருட்களுக்கு ஆசைப்பட்டு வாக்களிக்காமல், தகுதியான நபர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடக்கின்றன. பிரபலங்கள் மூலமும் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.  குமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்டும் வகையில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான அரவிந்த் தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலங்கள், கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக, நாகர்கோவிலில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 100 சதவீத வாக்குரிமையை நிறைவேற்றுவதற்காக மினி மாரத்தான் ஓட்டம் நேற்று காலை நடைபெற்றது.  நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து மினி மாரத்தான் தொடங்கியது. மணிமேடை, வேப்பமூடு, கோட்டார், செட்டிக்குளம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, டதி ஸ்கூல் சந்திப்பு, டிஸ்லரி ரோடு, காசி விஸ்வநாதர் கோயில் சந்திப்பு, வடசேரி அண்ணா சிலை சந்திப்பு வழியாக மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நிறைவடைந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் தலைமை வகித்தார். உதவி ஆட்சியர்  (பயிற்சி) ரிசப், துணை ஆட்சியர் (பயிற்சி) சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட திட்ட இயக்குனர் மைக்கேல் ஆன்றனி பெர்ணான்டோ, அண்ணா விளையாட்டு அரங்க நல சங்க செயலாளர் ஜெயின் ஷாஜி, தடகள வீரர் ஆறுமுகம் பிள்ளை மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக 100 சதவீத வா்க்குப்பதிவை எட்டும் வகையில் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.

Tags : Nagercoil ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...