×

தோவாளை மக்களுக்கு குடிநீர் பிரச்னை இனி இருக்காது அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் ஆஸ்டின் பிரசாரம்

நாகர்கோவில், மார்ச் 26: கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் எம்.எல்.ஏ தோவாளை ஒன்றியத்திற்கு உட்பட்ட சகாயநகர் பகுதியில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். இல்லத்தார் தெரு, காந்திநகர், வெள்ளமடம், குமரன்புதூர், விசுவாசபுரம், திருமலைபுரம், கிறிஸ்துநகர், சண்முகபுரம், அனந்தபத்மநாபபுரம், மைதீன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 99 சதவீதம் முடிந்துள்ளது. தேர்தல் முடிந்ததும் இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும். தோவாளை பகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னையே இனி வராது. தோவாளை சானல், நாஞ்சில் நாடு புத்தனாறு சானல் உட்பட அனைத்து கால்வாய்களையும், சானல்களையும் தூர்வாரி தடுப்புசுவர் அமைத்து தரப்படும்.

இதனால் கடைவரம்பு பகுதிகள் வரை தங்குதடையின்றி தண்ணீர் சென்றடையும். மத்திய அரசு மக்கள் விரோத திட்டங்களையும், சட்டங்களையும் கொண்டுவந்து மக்களை துன்புறுத்தி வருகிறது. மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டுவருவது இல்லை. மத்திய அரசு கொண்டுவருகின்ற மக்கள் விரோத சட்டங்களை மாநில அரசு ஆதரிக்கிறது. மத்திய அரசின் கைப்பாவையாக மாநில அரசு விளங்குகிறது. மத்திய மாநில அரசுகளால் குமரி மாவட்ட மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. எனவே தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தால் மட்டுமே ஒட்டுமொத்த பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற விஜய் வசந்திற்கும், சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற எனக்கும் பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். திமுக தோவாளை ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், பூதலிங்கம்பிள்ளை உட்பட கட்சியினர் உடனிருந்தனர். மாலையில் செண்பகராமன்புதூர் பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய ஆஸ்டின் எம்.எல்.ஏ காந்திநகர், பாரதிநகர், இந்திரா காலனி, சமத்துவபுரம், கிருஷ்ணன்புதூர், சுப்பிரமணியபுரம், முத்துநகர் பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

Tags : Dovalai ,Alagiyapandiyapuram ,Austin ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்...