×

வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைவு எதிரொலி சென்னைக்கு குடிநீர் சப்ளை நிறுத்தம்

சேத்தியாத்தோப்பு, மார்ச் 26: வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வீராணம் ஏரி, சுமார் 17 கிலோ மீட்டர் நீளமும் மூன்று கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்டதாகும். இந்த ஏரிக்கு அணைக்கரையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது கீழணைவாய்க்கால் மூலம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை பகுதியில் வீராணம் ஏரிக்குள் வந்தடைகின்றது. பழைய அளவீடுகளின் படி இந்த ஏரியின் மொத்த நீர்பிடிப்பு திறன் சுமார் 45 அடியாகும். சுமார் நாற்பதாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறன்றன.  

 அது மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான கிராமங்களின் குடிநீர் தேவைக்கு நிலத்தடி நீர் மட்டத்தை சமன் செய்யும் ஏரியாக வீராணம் ஏரி உள்ளது. சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது வீராணம் ஏரியில் போதிய தண்ணீர் இல்லாமல் பூதங்குடி, பரிபூரணநத்தம், வாழக் கொல்லை, கூளாப்பாடி, தென்பாதி, தெற்கு விருதாங்கநல்லூர். கொள்ளுமேடு, நத்தமலை, லால்பேட்டை ஆகிய கிராமங்களையொட்டியுள்ள வீராணம் ஏரியில் நீர்மட்டம் 5 அடியாக குறைந்து விட்டது. நெல், கருப்பு கரும்பு, வாழை, உளுந்து, வெற்றிலை பயிர்கள் உட்பட பெரும்பாலான பயிர்கள் பயிரிட்டு வருவதால் போதிய தண்ணீர் இல்லாமல் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.    
 
 வீராணம் ஏரியை வாழ்வாதாரமாக மீன் பிடித்து தங்களது வாழ்வை நடத்தி வரும் உள்நாட்டு மீனவர்களும் கடும் பஞ்சத்தை எதிர் நோக்கி உள்ளனர். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு ஏரிக்கு தண்ணீர் வரத்து இருக்காது. இதையடுத்து, நேற்று சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீர் நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால், காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றியுள்ள 25 சதுர கிலோ மீட்டருக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து விடும். கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். மேலும் விவசாயிகளின் கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாத அபாயம் ஏற்படும். மேட்டூரில் இருந்து கீழணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chennai ,Veeranam Lake ,
× RELATED சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி...