தேர்தல் முன்னேற்பாடு பணிகள் அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வு

தஞ்சை, மார்ச் 25: தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மற்றும் தேர்தல் பணிகளை ஆய்வு செய்ய தேர்தல் பொது பார்வையாளர்கள் தலைமையில், கலெக்டர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தொடர்பு அலுவலர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021ஐ நடத்த ஏதுவாக தொகுதிவாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்களாக 8 துணை கலெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு வேட்புமனு தாக்கல் அனைத்து தொகுதிகளிலும் கடந்த 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து கடந்த 20ம் தேதி வேட்புமனுக்கள் கூராய்வு செய்யப்பட்டு 22ம் தேதி இறுதி செய்து 89 வேட்பாளர்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட உள்ளனர். தேர்தல் அறிவிக்கை வெளியான கடந்த பிப்ரவரி 26ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. அது முதல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 72 பறக்கும் படை மற்றும் 72 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், மாவட்ட தேர்தல் அலுவலரால் நியமிக்கப்பட்டு அனைத்து தொகுதிகளிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி 1800 425 9464 எண்ணில் பொதுமக்கள் 24 மணி நேரமும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

தமிழக சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தல் தொடர்பாக அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் பணிகள், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் ஆகியவற்றை கண்காணிக்க 5 தேர்தல் பொது பார்வையாளர்களும், வேட்பாளர்களின் செலவினம் தொடர்பான விவரங்களை கண்காணிக்க 3 தேர்தல் செலவின பார்வையாளர்களும் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அமைந்துள்ள 2886 வாக்குச்சாவடிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்ட்ரா மாநிலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து பெறப்பட்டு, தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு தொகுதிகளில் உள்ள பாதுகாப்பறையில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள 102 வாக்குச்சாவடி மையங்களில் வரும் 27ம் தேதி முதல் சிசிடிவி கேமரா பொருத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மற்றும் தேர்தல் பணிகளை ஆய்வு செய்ய தேர்தல் பொது பார்வையாளர்கள் தலைமையில் கலெக்டர் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தொடர்பு அலுவலர்களை கொண்டு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்பார்வையிடும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட மாநில அளவிலான தேர்தல் பொது பார்வையாளர் அலோக் வர்தன், தேர்தல் காவல் பார்வையாளர் தர்மேந்திர குமார் ஆகியோர் தஞ்சை மாவட்டத்திற்கு வருகை புரிந்து அனைத்து தேர்தல் பொது பார்வையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினர்.

Related Stories:

>