குளித்தலை புறவழிச்சாலை மேம்பாலத்தில் திசைகாட்டும் பெயர் பலகை, ரிங் ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை

குளித்தலை, மார்ச் 25: கரூர் மாவட்டம் குளித்தலை முசிறி பெரியார் பாலம் செல்லும் வழியில் உள்ளது திருச்சி கரூர் புறவழிச்சாலை மேம்பாலம். இந்த மேம்பாலம் வழியாக கீழ்ப்பகுதியில் கோயம்புத்தூர், ஈரோடு ,கரூர், காங்கேயம் மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த புறவழிச்சாலை மேம்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்நிலையில் இந்த இரு மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் முசிறிக்கோ குளித்தலை, மணப்பாறைக்கு, கரூருக்கோ செல்ல வேண்டுமென்றால் நகரத்தில் உள்ள சிறிய பாதை வழியாக சென்று பல நபர்களை கேட்டு அதன்பிறகுதான் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் இந்த புறவழிச்சாலை பாலம் மேல்பகுதியில் முசிறி, திருச்சி, மணப்பாறை என பெயரிட்டு அம்புக் குறியுடன் பெயர் பலகை இருபுறமும் வைத்தால் வாகன ஓட்டிகள் வெளியூரிலிருந்து வருபவர்கள் எளிமையாக புறவழிச் சாலையில் இருந்து கடந்து செல்ல வாய்ப்பாக இருக்கும்.

தற்போது பகல் மற்றும் இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வெளியூர் வாகனங்கள் வழிதெரியாமல் ஒரு சில நேரங்களில் குமாரமங்கலம் பிரிவு இருக்கும் வதியம் பிரிவு ரோட்டிற்கும் சென்று விடுகின்றன. அதன் பிறகு மீண்டும் மூன்று கிலோமீட்டர் திரும்ப வர வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது அதனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி திருச்சி கரூர் புறவழிச்சாலையில் ஆய்வு செய்து முசிறி பெரியார் பாலம் அருகே உள்ள புறவழிச்சாலை மேம்பாலம் அருகே ரிங் ரோடு வசதி ஏற்படுத்தி கரூரிலிருந்து வாகனங்கள் இந்த மேம்பாலம் வழியாக முசிறி- மணப்பாறைக்கு செல்ல வசதியாக இருக்கும்.அதேபோல் திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள் மணப்பாறைக்கு முசிறிக்கோ செல்வதற்கு வசதியாக இருக்கும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>