×

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு

ஊட்டி, மார்ச் 25: கீழ்கோத்தகிரி ஒன்றியத்திற்குட்பட்ட வ.உ.சி. நகர், குட்டிமணி காலனி மற்றும் ஒடேன் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் ராமசந்திரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.  சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. தேர்லுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் ராமசந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  நேற்று கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரி ஒன்றியத்திற்குட்பட்ட வ.உ.சி. நகர், உல்லத்தட்டி, ஓடேன், கப்பட்டி, கம்பட்டி, நாரகிரி, குட்டிமணி காலனி, பட்டமுக்கு கொக்கோடு, அரக்கோடு, கரிக்கையூர், கடினமாலா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தில் அவர் பேசுகையில்,`அரசு கலைக்கல்லூரி அமைத்து தரப்படும். 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானங்கள் அமைத்து தரப்படும். அனைத்து கிராமங்களிலும் குடிநீர், நடைபாதை, தடுப்புச்சுவர், சாலை உள்ளிட்ட வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.

கோத்தகிரி மற்றும் கீழ்கோத்தகிரி பகுதிகளில் தி.மு.க.வினரே உள்ளாட்சி தலைவர்களாக உள்ளனர். எனவே, அதிக நீதி பெற்று கொடுத்து அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். தி.மு.க. ஆட்சியின் போது துறையர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்ததன் மூலம், தற்போது அந்த சமூதாயத்தை சேர்ந்தவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகவும், மருத்துவர் பட்டம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், பலர் அரசு வேலைகளிலும் சேர்ந்துள்ளனர். இது தி.மு.க.வின் வெற்றி. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார். இப்பிரசாரத்தின் போது, கீழ்கோத்தகிரி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் எக்ஸ்போ செந்தில், கே.எம்.ராஜூ, இளங்கோவன், மாவட்ட பொருளாளர் நாசர்அலி, கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொந்தோஸ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், ஊராட்சி தலைவர்கள் சிவா, ஆல்வின், சுப்பக்காரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி