மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

ஈரோடு, மார்ச் 25:   ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கைகேற்ப 1,173 கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.    ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 926 இடங்களில் 2,741 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்த 3,454 கட்டுப்பாட்டு இயந்திரம், 4,757 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், 3,695 வி.வி.பேட் என மொத்தம் 10,140 இயந்திரங்கள் கடந்த வாரம் 8சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டி உள்ளது. இதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில், 320 வாக்குச்சாவடியில் கூடுதலாக 16 வி.வி.பேட் இயந்திரமும், ஈரோடு மேற்கு தொகுதியில் உள்ள 403 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதலாக 25 வி.வி.பேட், மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள 332  வாக்குச்சாவடிக்கு கூடுதலாக 16 வி.வி.பேட், பெருந்துறை தொகுதியில் உள்ள 325வாக்குச்சாவடிக்கு கூடுதலாக 390 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 17 வி.வி.பேட் இயந்திரமும், பவானி தொகுதியில் உள்ள 335 வாக்குச்சவாடிக்கு 17 வி.வி.பேட்,

அந்தியூர் தொகுதியில் உள்ள 303 வாக்குச்சாவடிக்கு 364 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 17 வி.வி.பேட், கோபி தொகுதியில் உள்ள 349 வாக்குச்சாவடிக்கு 419 வாக்குப்பதிவு இயந்திரம், 17 வி.வி.பேட், பவானிசாகர் தொகுதியில் உள்ள 374 வாக்குச்சாவடியில் 17 வி.வி.பேட் என மொத்தம் 1,173 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 142 வி.வி.பேட் இயந்திரங்கள் கணினி முறையில் சுழற்சி செய்து, ஒதுக்கீடு செய்யப்பட்டது.    இதனை, ஈரோடு ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான, கலெக்டர் கதிரவன் தலைமையில் தேர்தல் பார்வையாளர்கள், அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில், ஒவ்வொரு தொகுதிக்குமான கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை, வாகனத்தில் ஏற்றி போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. இதன்படி, மாவட்டத்தில் 8சட்டமன்ற தொகுதியிலும் 11,455 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>