முடங்கி கிடக்கும் ஈரோட்டை மீட்டெடுப்பேன்

ஈரோடு, மார்ச் 25:   வளர்ச்சி  இல்லாமல் முடங்கி கிடக்கும் ஈரோட்டை மீட்டெடுக்க வாய்ப்பு தாருங்கள் என்று  திமுக வேட்பாளர் முத்துசாமி கேட்டுக்கொண்டுள்ளார். ஈரோடு மேற்கு  தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் முத்துசாமி நேற்று அம்பேத்கர்  வீதி, கண்ணகி வீதி, இளங்கோ வீதி, அவ்வையார் வீதி, அகத்தியர் வீதி,  விவேகானந்தர், மறைமலை அடிகள் வீதி, திருவள்ளுர் வீதி மற்றும் பாரதிபுரம்,  காசிபாளையம் மலைக்கோயில், முத்தம்பாளையம், ஜே.ஜே. நகர், சுப்பிரமணிய நகர்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, வேட்பாளர் முத்துசாமி பேசியதாவது: ஈரோட்டில்  கடந்த 10 ஆண்டுகளாக குறிப்பிடும் படியாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.  மேம்பாலம் கட்டப்பட்டுள்ளதை சாதனையாக கூறுகின்றனர். ஆனால், அந்த பாலம்  முறையான திட்டமிடல் இல்லாமல், கட்டப்பட்டதால் எவ்வித பயனும் இல்லாமல், வழக்கம் போல போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. பாதாள சாக்கடை  மற்றும் பாதாள மின்கேபிள் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலையில் பல்வேறு  இடங்களில் செப்பனிடப்படாமல் அப்படியே கிடக்கிறது.

ஈரோடு மாநகர பகுதி  பல ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ, அதே நிலையில்தான் தற்போதும்  உள்ளது. மாநகர முன்னேற்றத்திற்கு எந்த திட்டமிடலும் இல்லை. எனவே, முடங்கி  கிடக்கும் ஈரோட்டை மீட்டெடுக்க வாய்ப்பு கொடுங்கள். ஈரோட்டிற்கு என்று  தனியாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள்  வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அதை நிறைவேற்ற நீங்கள் உதயசூரியன் சின்னத்தில்  வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்யுங்கள். இவ்வாறு முத்துசாமி பேசினார்.

Related Stories:

>