×

சிபிசிஐடி போலீஸ் எனக்கூறி தனியார் நிறுவன உரிமையாளரிடம் ₹20 ஆயிரம் பறிப்பு: இளம்பெண் உள்பட 3 பேர் கைது

அம்பத்தூர், மார்ச் 25: அம்பத்தூரை அடுத்த கொரட்டூரில் சிபிசிஐடி போலீஸ் என கூறி ரூ.20ஆயிரம் பறித்த இளம்பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், சந்தோஷ் நகர், வாட்டர் கெனால் ரோட்டை சேர்ந்தவர் சேகர் (32). இவர் ஆன்லைன் மூலமாக வெப்சைட்டை டிசைன் செய்து கொடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் சேகர் தனது அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண் உள்பட 3 பேர் அங்கு வந்தனர். பின்னர், அவர்கள் தங்களை சிபிசிஐடி போலீஸ் என கூறி அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர், அவர்கள் மூவரும் அவரிடம், உங்கள் மீது மோசடி புகார் வந்துள்ளது. அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, ரூ. 20ஆயிரம் பணம் லஞ்சமாக  தர வேண்டும் என கேட்டனர். மேலும், அவர்கள் அனைவரும் சேர்த்து, சேகரிடம் இருந்து ரூ.20ஆயிரம் பணத்தை பறித்து உள்ளனர்.  

இதனை அடுத்து, அவர்கள் மீது சந்தேகம் அடைந்த சேகர் உடனடியாக கொரட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் மூவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் கொளத்தூர், விநாயகபுரம் தலைமைச் செயலக காலனியை சேர்ந்த நிருபன் சக்கரவர்த்தி (29), வில்லிவாக்கம், தெற்கு மாட வீதியை சேர்ந்த விஷ்ணுகுமார் (40), அமைந்தகரை, சுண்ணாம்பு கால்வாய் தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி (22) என்பது தெரியவந்தது.  புகாரின் அடிப்படையில் கொரட்டூர் எஸ்.ஐ பச்சமுத்து தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் நேற்று கைது செய்தனர். பின்னர்,  போலீசார் அவர்களை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : CBCID ,
× RELATED பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன்...