திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரம்

திருவள்ளூர், மார்ச் 25: திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளில், வாக்குப்பதிவுக்கான பணிகளில் தேர்தல் அதிகாரிகளும், வாக்குகளை பெறும் பணிகளில் அரசியல் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கென 2,437 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஊராட்சிகளுக்கும் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சீட்டு, வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது உட்பட தேர்தல் வாக்குப்பதிவிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில், தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டு உள்ள அலுவலர்களுக்கு, மூன்று கட்ட பயிற்சிகள் நிறைவு பெற்றுவிட்டது. அலுவலர்கள் தபால் வாக்கு பதிவு செய்யும் வகையில் அவர்களுக்கான படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபட, அலுவலர்கள், எந்த நேரத்தில் வாக்குச்சாவடிகளில் இருக்க வேண்டும். வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணிகள் என்னென்ன என்பது குறித்தும் மண்டல அலுவலர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரம் கையாளுவது குறித்தும் பயிற்சி அளித்துள்ளனர்.

இதை தொடர்ந்து ஓவ்வொரு வாக்குச்சாவடிக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் பொருட்கள் தனித்தனியாக சாக்குப் பையில் நிரப்பி, அதை கட்டிவைக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த சாக்குப்பையில் அழியாத மை உட்பட 76 வகை பொருட்கள் அடங்கியுள்ளது. அரசியல் கட்சியினரும் தீவிரம்: அரசியல் கட்சியினரும் அனைத்து பகுதிகளிலும், உள்ளூர் நிர்வாகிகளுடன், வீடு, வீடாக, தெரு தெருவாக சென்று தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

கட்சியினரின் பிரசார வாகனங்கள், மூலை முடுக்கெல்லாம் சுற்றி, வாக்குறுதிகளை ஒலிக்க விட்டு, மக்களை தெறிக்க விட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு நாள் நெருங்கி உள்ளதால், முக்கிய கட்சியினர் பல வகைகளிலும், வாக்காளர்களை கவரும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Related Stories:

>