ஏனம்பாக்கம் கிராமத்தில் பழுதடைந்து பயன்பாடில்லாமல் கிடக்கும் ஊராட்சி அலுவலகம்

ஊத்துக்கோட்டை, மார்ச் 25: ஏனம்பாக்கம்  கிராமத்தில்  பழுதடைந்து பயன்பாடில்லாமல் கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை அகற்றிவிட்டு, புதிதாக கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். பெரியபாளையம்  அருகே எல்லாபுரம் ஒன்றியம் ஏனம்பாக்கம்   ஊராட்சியில்  அரசு மற்றும்  தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள் என  500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.  இவர்கள், குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி, சொத்து வரி  உள்ளிட்ட பல்வேறு வரிகள் கட்டுவதற்கு  ஊராட்சி அலுவலகம் சென்றுதான் கட்ட வேண்டும். ஆனால், இந்த ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. இதனால்,  இந்த கட்டிடம் கடந்த 7 வருடங்களாக  சேதம் அடைந்து மழை காலங்களில் மழை நீர் கசிந்து அலுவலகத்தின் உள்ளே உள்ள முக்கிய கோப்புகள்  நனைந்தது கட்டிடம் இடிந்து விழும் நிலையில் பழுதடைந்து  காணப்பட்டது.  இதனால், இதை யாருமே பயன்படுத்தவில்லை.

இந்நிலையில், ஏனம்பாக்கம்  ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள இ-சேவை மைய கட்டிடத்தில் தான் ஊராட்சி அலுவலகம்  இயங்கி வருகிறது. பழைய கட்டிடத்தில் தற்போது ஆடுகள் கட்டப்பட்டுள்ளது.  எனவே, பழைய  கட்டிடத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஏனம்பாக்கம்  கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற  அலுவலகத்தில் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டங்கள்  மற்றும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் ஆகியவை நடைபெறும். ஊராட்சி மன்ற கூட்டம் இ - சேவை மையத்தில்தான் செயல்பட்டு வருகிறது.  பழைய கட்டிடம் பழுதடைந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. இது குறித்து பெரியபாளையம் பிடிஒ அலுவலகம் மற்றும் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பழைய ஊராட்சி கட்டிடத்தை அகற்றி புதிய ஊராட்சி கட்டிடம் கட்ட வேண்டும்’  என்றனர்.

Related Stories:

>