மாரியம்மன் கோயில் விழாவில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

மானாமதுரை, மார்ச் 25: மானாமதுரையில் தயாபுரம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.மானாமதுரையில் சிவகங்கை மெயின் ரோட்டில் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு முன் பங்குனித் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று வேண்டுதலை நிறைவேற்ற ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். தினமும் விழா நாட்களில் மண்டகப்படி தாரர்கள் சார்பில் தினமும் இரவு முத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று வைகை ஆற்றில் இருந்து புனித நீர், பால்குடம், அக்னிசட்டி எடுத்து நூற்றுக்ணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். இரவு நடைபெற்ற தீமிதி விழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் கோயில் பூசாரி சுப்பிரமணியம் தலைமையில் அங்கு மாரியம்மன் சன்னதி முன்பு பரப்பி வைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் முத்துமாரி அம்மனை தரிசனம் செய்தனர்.

Related Stories:

>