×

பரமக்குடி பங்குனி திருவிழாவில் காளி வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பரமக்குடி, மார்ச் 25:  பரமக்குடியில் முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, வண்டிமாகாளி வேஷம் நிகழ்ச்சியில், பக்தர்கள் காளி உள்ளிட்ட பெண்கள் வேடம் அணிந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். பரமக்குடி நகரின் காவல் தெய்வமான முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோவிலின் பங்குனித் திருவிழா, கடந்த 20ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4ம் நாள் விழாவான, பரமக்குடி சின்னக்கடை தெரு வன்னியகுல சத்திரிய மகாசபை சார்பில் வண்டி மாகாளி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் விரதம் மேற்கொண்ட பக்தர்கள், காளி வேடம் அணிந்து வண்டியில் அமர்ந்தவாறும், 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் பெண் வேடம் அணிந்து வண்ண உடைகளில் நின்று நடனம் ஆடியபடியும் சென்றனர். நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்ற வண்டி மாகாளி ஊர்வலம் சின்னக்கடை தெரு, மண்டகப் படியினை சென்றடைந்தனர். அங்கு காளி வேடம் அணிந்த பக்தர் பக்தி பரவசத்துடன் ஓடிச்சென்று நிறுத்தப்பட்டிருந்த வாழை மரத்தை வெட்டி, சூரசம்ஹார நிகழ்ச்சியினை நடத்தினார். தொடர்ந்து மண்டகப்படியில் முத்தால பரமேஸ்வரி அம்பாளுக்கு விஷேச தீபாராதனைகள் நடந்தன. பரமக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

Tags : Kali ,Paramakudi Panguni festival ,
× RELATED காளி வெங்கட்டின் விவசாயிகளுக்கான பாடல்