×

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் விவசாயப் புரட்சி சாத்தியமான ஒன்றுதான்

நாங்குநேரி, மார்ச் 25:  வறட்சி நிறைந்த நாங்குநேரி தொகுதியில் விவசாயப் புரட்சி சாத்தியமான ஒன்றுதான். அதை நிகழ்த்திக் காட்ட, ஒவ்வொருவரும் கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார். நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நேற்று அழகப்பபுரம், இட்டமொழி, விஜயநாராயணம், அச்சம்பாடு, பாப்பான்குளம், இலங்குளம், பரப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இதற்கு முன் உங்களை பலமுறை சந்திக்க வந்துள்ளேன். உங்களது குறைகளை கேட்டு முடிந்தவரை நிறைவேற்றி கொடுத்து இருக்கிறேன். தற்போது காங்கிரஸ் வேட்பாளராக ஆதரவு தேடி வந்து நிற்கிறேன். தொகுதி மக்கள் ஒவ்வொருவரும் அனைத்து வசதிகளுடன் ஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால், நம் தொகுதியோ, வறட்சி நிறைந்த, மிகவும் பின்தங்கிய பகுதியாகவே இருந்து வருகிறது. சரியான திட்டங்கள் இங்கே கொண்டு வரப்படவில்லை.எனவே நல்லத் திட்டங்களை கொண்டு வந்து, உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவேன். அதற்கான பல நல்ல திட்டங்களை வைத்திருக்கிறேன்.

குறிப்பாக இந்தத் தொகுதியில் விவசாயத்தை கைவிட்ட அனைவரும் மீண்டும் விவசாயம் செய்ய வேண்டும். அதுவும், இன்றைய காலத்துக்கு ஏற்ப நவீனமாக செய்ய வேண்டும். குடிக்கவே தண்ணீர் இல்லாத இங்கே விவசாயம் எப்படி செய்வது என்று நீங்கள் யோசிக்கலாம். இங்கு நீர்வளத்தைப் பெருக்கினால், வறட்சி என்கிற அவலநிலை மாறிவிடும். இங்குள்ள ஏரி, குளம், கண்மாய்களில் தண்ணீர் நிறைந்திருந்தாலே போதும். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துவிடும். உவர்நீர் நல்ல தண்ணீராக மாறிவிடும். தண்ணீர் கிடைத்துவிட்டால் விவசாயம் செய்து விடலாம். ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைத்தால், முப்போகம் விவசாயம் செய்யலாம்.  மேலை நாடுகளில் விவசாயத்தை நவீனமாக ரசித்துச் செய்கிறார்கள். அதுபோன்ற வாய்ப்பை நாமும் உருவாக்குவோம். இந்த விவசாயப் புரட்சி நம் தொகுதியில் ஏற்பட, நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் கைச் சின்னத்துக்கு போடும் ஓட்டு, உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தப்போகிறது. இது, உறுதி. இந்த மறுமலர்ச்சியை ஏற்படுத்த மாயாஜாலம் செய்ய தேவையில்லை. மழை காலங்களில் கிடைக்கும் தண்ணீரை, நம் ஊர்களில் உள்ள அத்தனை ஏரி, குளங்களையும் ஆழமாக தூர்வாரி சேமித்து வைத்தாலே போதும்.
அதோடு, கடலுக்குள் வீணாகச் சென்று கலக்கும் ஆற்றுத் தண்ணீரை, நம் தொகுதி முழுவதும் கொண்டு செல்லும் வகையில் நீர் மேலாண்மைத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினாலே போதும். வறட்சி, காணாமல் போய்விடும். விவசாயம் செழித்துவிடும். நம் தொகுதியை விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றி, உங்கள் ஒவ்வொருவரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டியது என் கடமை. இந்த மாபெரும் மாற்றத்தை நம் நாங்குநேரி தொகுதியில் உங்களோடு இருந்து செயல்படுத்த, கைச் சின்னத்தில் உங்கள் வாக்குகளை வழங்கி, இந்தத் தேர்தலில் என்னை வெற்றிபெறச் செய்ய கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ரூபி மனோகரன் பேசினார்.

Tags : Nanguneri assembly ,
× RELATED ரூபி மனோகரன் எம்எல்ஏ தலைமையில்...