பங்குனி பிரமோற்சவ திருவிழா நாங்குநேரியில் தங்க சப்பரத்தில் தாயாருடன் பெருமாள் வீதியுலா

நாங்குநேரி, மார்ச் 25:  நாங்குநேரி பெருமாள் கோவில் பங்குனி பிரமோற்சவ திருவிழாவில் ஏழாம் நாளான நேற்று சுவாமி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.நாங்குநேரி பெருமாள் கோயிலில் கடந்த 18ம்தேதி முதல் பங்குனி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் வானமாமலை பெருமாளுக்கும் திருவரமங்கை தாயார் மற்றும் ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகளுடன் தீர்த்தம் திருமஞ்சன வினயோகமும் நடந்து வருகின்றன.  தினமும் காலை மாலை பெருமாள் வீதியுலா நடந்து வருகிறது.  

முதல் மற்றும் ஐந்தாம் திருநாளில் பெருமாள் கருட வாகனத்திலும், இரண்டாம் திருநாள் சிம்ம வாகனத்திலும், மூன்றாம் திருநாள் அனுமன் வாகனத்திலும், நான்காம் திருநாள் ஆளேறும் பல்லக்கு, ஆறாம் திருவிழாவில் யானை வாகனம் என பல்வேறு வாகனங்களில் தாயார் மற்றும் ஆண்டாளுடன் சப்பரங்களில் வீதி உலா வந்தனர்.  ஏழாம் திருநாளை முன்னிட்டு நேற்று மாலை பெருமாள், திருவரமங்கை தாயாருடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் திருஉலா நடந்தது. நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டு  பெருமாளுக்கு பூமாலை மற்றும் பட்டாடைகள் அணிவித்தும், தேங்காய், பழம், வெற்றிலை. பாக்கு படைத்தும் சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>