தேர்தல் பயிற்சிக்கு வராத ஊழியர்களுக்கு நோட்டீஸ் இன்று மாலைக்குள் பதிலளிக்க உத்தரவு வேலூர் மாவட்டத்தில்

வேலூர், மார்ச் 25: வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பயிற்சிக்கு வராத ஊழியர்கள் இன்று மாலைக்குள் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:வேலூர் மாவட்டத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக மாவட்டம் முழுவதும் 1,783 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றுவதற்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு, அவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள தவறியவர்களுக்கு இன்று(நேற்று) விளக்கம் கேட்டு காரணம் கோரும் குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இந்த குறிப்பாணை கிடைக்கப்பெற்றவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் கலெக்டரிடம் நேரடியாக வந்து விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்படுகிறது. அதில் விளக்கும் பெற தகுதி இல்லாதவர்கள் கண்டிப்பாக வரும் 28ம் தேதி நடக்கும் 2வது கட்ட பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அதிலும் தவறும் பட்சத்தில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை விதிகளின் கீழ் விதி எண் 17(பி) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அது விசாரணை முடிந்து இறுதி உத்தரவு கலெக்டரும் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் ஓப்புதல் பெற்ற பின்னர் பிறப்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Related Stories:

>