×

127 நுண் பார்வையாளர்கள் நியமனம் கலெக்டர் தலைமையில் சிறப்பு பயிற்சி பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க

திருவண்ணாமலை, மார்ச் 25: திருவண்ணாமலை மாவட்டத்தில், அதிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட 127 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் மொத்தம் 2,885 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 80 இடங்களில் அமைந்துள்ள 206 வாக்குச்சாவடிகள் அதிக பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.எனவே, அதிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்துதல், துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

இந்நிலையில், அதிக பதற்றான வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் (மைக்ரோ அப்சர்வர்) கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதையொட்டி, வங்கி உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் 127 பேர் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. அதில், கலெக்டர் சந்தீப் நந்தூரி, எஸ்பி அரவிந்த் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.வாக்குப்பதிவு நேர்மையாகவும், முறைகேடுகள் இல்லாமலும் நடக்கவும், எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் வாக்காளர்கள் வாக்களிக்கவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிக பதற்றமான வாக்குச்சாவடிகளில், விதிமீறல்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என்பதை, நுண் பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு நிலவரங்களை, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை நுண் பார்வையாளர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். வாக்குச்சாவடி மையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால், அது குறித்தும் நுண் பார்வையாளர்கள் தகவல் அளிக்க வேண்டும்' என்றார்.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுதேர்வில் 7வது ஆண்டாக 100...